Published : 03 Oct 2013 03:18 PM
Last Updated : 03 Oct 2013 03:18 PM

போஸ்கோ பணியை நிறுத்துங்கள் - ஐ.நா. மனித உரிமைக் குழு உத்தரவு



ஒடிசா மாநிலத்தில் போஸ்கோ ஆலை அமைக்க உள்ள இரும்பு உருக்காலை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆலை அமைவதால் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்தப் பணியை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு வலியுறுத்தியுள்ளது.

அன்னிய முதலீடுகளில் மிகப் பெருமளவிலான முதலீடு போஸ்கோ ஆலையாகும். ஒடிசா மாநிலத்தில் ஆலை மற்றும் அதற்கான துறைமுகத்தை அமைக்க தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1,200 கோடி டாலர் முதலீட்டிலான இந்த ஆலை அமைய அனுமதித்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

ஒடிசாவில் இந்த ஆலை அமைப்பதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவதில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக ஆலை அமையவுள்ள பகுதிக்கருகே பொதுமக்கள் தர்னா போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இந்த ஆலை அமைக்கப்படுவதில் முன்னேற்றம் எட்டப்படவில்லை.

இந்த ஆலை அமைவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுயேச்சையான அமைப்பு ஆய்வு செய்தது.

இந்த ஆலை அமைப்பதற்கு அனுமதிப்பதற்கு முன்பாக இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்றும் அவர்களது மறுவாழ்வுக்கு போதிய வசதிகள் செய்யப்படுவது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்படாதவரை ஆலைப் பணிகள் தொடங்கப்படக்கூடாது என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நில ஆர்ஜிதம் என்ற பெயரில் 22 ஆயிரம் மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதிகளைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டிய குழு உறுப்பினர் மக்தலீனா சபுல்வேதா குறிப்பிட்டார். இதுபோன்ற மெகா திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. மேலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை நமது வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் தவறானது. மேலும் இதுபோன்ற திட்டப் பணிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நிறைவேற்ற நினைப்பது மிகவும் தவறானது என்று மக்தலீனா குறிப்பிட்டார்.

போஸ்கோ ஆலைக்கு மொத்தம் 4,004 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. 2,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக ஒடிசா மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இதில் 1,700 ஏக்கர் நிலம் போஸ்கோ ஆலை நிர்வாகத்திடம் அளித்துள்ளது. விரைவிலேயே மேலும் 1,000 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டப் பணிகளைத் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக போஸ்கோ ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு அளித்துள்ள அறிக்கை தொடர்பாக கருத்து எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

கர்நாடக மாநிலத்தில் போஸ்கோ ஆலை நிர்வாகத்தினல் 600 கோடி டாலர் மதிப்பிலான திட்டப் பணியைக் கைவிட்டனர்.

இதற்கான நில ஆர்ஜிதம் தாமதமாவதால் அத்திட்டத்தைக் கைவிடுவதாக போஸ்கோ ஆலை தெரிவித்தது.

ஆனால் ஒடிசா மாநிலத்தில் அமைய உள்ள உருக்கு ஆலையின் முதல் பிரிவு 2018-ல் செயல்படு என்று அதிகாரிகள் நம்புகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது பிரிவும், அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது பிரிவையும் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

2005-ம் ஆண்டு தென் கொரியாவின் போஸ்கோ ஆலை நிர்வாகத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி மாநிலத்தில் ஆண்டுக்கு 12 மில்லியின் டன் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் இரும்புத் தாது வெட்டியெடுப்பது உள்ளிட்ட சுரங்கப் பணியும் இதில் அடங்கும்.

இந்தத் திட்டப்பணி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடிமகனையும் காக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. அதேபோல போஸ்கோ நிறுவனத்துக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தங்களது வணிக நோக்கத்திற்காக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை போஸ்கோ ஆலையும் உணர வேண்டும் என்று ஐ.நா. குழு சுட்டிக் காட்டியுள்ளது.

நில ஆர்ஜிதம் செய்வதற்காக மக்களை கட்டாயமாக வெளியேற்றுவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தங்கள் ஆலை உருவாக்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் மனித உரிமைகள் மீறப்படலாகாது என்பதில் போஸ்கோ கவனமாக இருக்க வேண்டும். என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x