

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. நேற்று காலை ஆங்கில நாளிதழ் வெளியிட்டி ருந்த இந்த செய்தியை இன்ஃபோசிஸ் நிறுவனம் உடனடியாக மறுத்துள்ளது.
தவிர இந்த ஊகங்களை நிறு வனர்களும் மறுத்திருக்கின்றனர் என நிறுவனம் தெரிவித்திருக் கிறது. தவிர இதுபோல எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் நிறுவனம் மறுத்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாராயண மூர்த்தி, கிரிஷ் கோபால கிருஷ்ணன், நந்தன் நிலக்கேணி, கே.தினேஷ் மற்றும் எஸ்.டி. சிபுலால் ஆகிய ஐவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வசம் 12.75 சதவீத பங்குகள் உள்ளன.
இந்த செய்தி குறித்த நிறுவனர்களில் ஒருவரான கிரிஷ் கோபாலகிருஷ்ணனுக்கு மெயில் மூலம் தொடர்பு கொண்டபோது, இன்ஃபோசிஸ் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என மறுத்துவிட்டார். நாராயணமூர்த்தி மற்றும் நிலக்கேணி ஆகியோர் பதில் அளிக்கவில்லை.
இன்ஃபோசிஸ் பங்கு சரிவு
நிறுவனர்கள் பங்குகளை விற்கும் செய்தி வெளியானதால், அந்த பங்கு நேற்றைய வர்த்தகத்தின் இடையில் 3 சதவீதம் வரை சரிந்தது. இந்த செய்திக்கு மறுப்பு வெளியானதால் உயரத் தொடங்கினாலும் நேற்றைய வர்த்தகத்தில் சரிந்தே முடிந்தது.