வங்கிகளின் நோக்கம் லாபம் என மாறுவது நல்லதல்ல..

வங்கிகளின் நோக்கம் லாபம் என மாறுவது நல்லதல்ல..
Updated on
3 min read

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. இந்த நிலையில் வங்கிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவருடனான உரையாடலில் இருந்து..

வங்கித் துறை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ன?

வாராக் கடன் பிரச்சினைதான் பெரிய சவால் என்று பரவலாக கூறுகிறார்கள். ஆனால் அதைவிட பெரிய சவால் தேவையானவர் களுக்கு வங்கிக் கடன் சேரவில்லை என்பதுதான். இதனால் வங்கிகளின் வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க ஆர்வம் காட்டும் வங்கிகள், உண்மையிலேயே பணத் தேவையுள்ள சிறு தொழில்கள், விளிம்பு நிலை மக்களுக்கு கடன் கொடுக்காமல் விரட்டி அடிக் கின்றன. இவர்களுக்கும் எளிதாக கடன் கிடைக்கச் செய்வதுதான் வங்கிகளின் முன்னுள்ள மிகப் பெரிய சவால்.

ஏழைகளுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜன்தன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறதே?

ஜன்தன் யோஜனா மூலம் நாடு முழுவதும் புதிதாக 28 கோடி கணக்குகள் வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறு கிறார்கள். வங்கிகளில் வெறும் கணக்கை மட்டும் தொடங்கி என்ன பயன்? அந்த கணக்கில் சேமிக்கக் கூடிய சக்தியை அந்த மக்களுக்கு தர வேண்டாமா? அந்த மக்களின் சிறு, சிறு தொழில்களுக்கு தேவையான கடனை கொடுத்து, அவர்களின் தொழில் வளர்ச்சி பெற உதவினால்தானே அந்த மக்களால் வங்கிக் கணக்கில் சேமிக்க முடியும். மாறாக வங்கியில் ஒரு கணக்கை தொடங்குவதால் மட்டும் ஒருவருடைய வாழ்வில் என்ன பொருளாதர மாற்றம் ஏற்பட்டு விடும்?

தனியார் வங்கிகளின் வளர்ச்சி யோடு ஒப்பிடுகையில் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி சாத்தியம்தானா?

தனியார் வங்கிகளின் வளர்ச்சி யோடு பொதுத்துறை வங்கிகளை ஒப்பிட முடியாது. தனியார் வங்கி களால் அனைத்து மக்களுக்கும் சேவை அளிக்க முடியாது. முக்கிய மாக அவர்களது முதன்மை நோக்கம் லாபம். ஆனால் பொதுத்துறை வங்கிகளின் முதன்மை நோக்கம் சேவை. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் வங்கிச் சேவை எளிதில் கிடைக்கும். வங்கிச் சேவையை இந்தியாவின் கடை கோடி கிராமங்களுக்கும் கொண்டு செல்வது, நாட்டின் வளர்ச்சிக் காக வங்கிகளின் சேமிப்பை அதி கரிப்பது, அந்த சேமிப்பிலிருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு குறு விவசாயிகள், தொழில் முனைவோருக்கு எளிதில் வங்கிக் கடன் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காகதான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதனால் சாதாரண மக்களின் பொருளாதார வளர்ச்சியுடன், வங்கிகளும் சேர்ந்து வளர்ச்சி பெறும். நமது பொதுத்துறை வங்கிகள் இப்படித் தான் வளர்ச்சி அடைந்தன. ஆனால் இப்போது சாதாரண மக்களுக்கான சேவையைக் குறைத்துக் கொண்டு, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற நிர்பந்தம் திணிக்கப்படுகி றது. இவ்வாறு செயல்பட்டால், பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி என்பது எதிர் திசை பயணமாகவே அமையும்.

வங்கித் துறை சிறப்பாக செயல்பட வேண்டுமானால், தனியார்மயம் அவசியம் என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறதே…?

திறந்த பொருளாதார சந்தை யும், தனியார்மயமும்தான் பொருளா தார வளர்ச்சியை தரும் என வாதிடு கின்றனர். ஆனால் 2008-ல் அமெரிக்க பொருளாதாரம் கடுமை யான வீழ்ச்சியை சந்தித்த போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி உருவானது. அந்த நேரத்தில் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாததற்கு முக்கிய காரணமாக இருந்தவை நமது பொதுத்துறை வங்கிகள்தான்.

இந்திய பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவோம் என்று கூறினால், அதன் காரணமாக பெரும் பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாக ஆவார்கள். அதே நேரத்தில் பரம ஏழைகள் மேலும் பரம ஏழைகள் ஆவதும் நிச்சயம். இதனால் இந்தியாவில் மக்களிடையே ஏற்கனவே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் அதிகரிக்கும். இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

ஸ்டேட் வங்கி அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது மக்களை பாதிக்காதா?

இந்த ஆண்டு எவ்வளவு பேருக்கு கடன் கொடுத்தீர்கள்? கடன் பெற்றவர்களில் பெரும் பணக்காரர்கள் எத்தனை பேர், ஏழைகள், சிறு விவசாயிகள், வணிகர்கள் எத்தனை பேர்? நீங்கள் கொடுத்த கடனைப் பயன்படுத்தி தொழிலில் வளர்ச்சி அடைந்தவர்கள் எத்தனை பேர்? இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்ன, வங்கிக்கு ஏற்பட்ட வளர்ச்சி என்ன? இப்படியெல்லாம் வங்கிகளைப் பார்த்து கேட்க இங்கு யாரும் இல்லை. மாறாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உங்களின் லாப சதவீதம் என்ன? இந்த ஒரு கேள்வி மட்டும்தான் மத்திய அரசாலும், ரிசர்வ் வங்கி யாலும், சில பொருளாதார நிபுணர் களாலும் கேட்கப்படுகின்றன. லாபம் மட்டுமே நோக்கம் என்றாகிவிட்ட பிறகு, இதுபோன்ற சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கவே செய்யும்.

வாராக்கடன் அதிகரிக்க பொதுத் துறை வங்கிகளின் மோசமான நிர்வாகம்தான் காரணம் என்று கூறப்படும் சூழலில், வங்கிகளை தனியார்மயமாக்குவதே சரியான தீர்வு என்ற வாதத்தில் என்ன தவறு இருக்க முடியும்?

இந்த வாதமே தவறு. வங்கிகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே வாராக்கடன் என்பதும் இருக்கிறது. ஆனால் அந்த வாராக்கடன் யாரிடம் இருந்து வர வேண்டும் என்பதுதான் முக்கியம். பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களோடு ஒப்பிட்டால், ஏழை கள், விவசாயிகள், சிறு, குறு வணிகர்களிடமிருந்து வர வேண்டிய வாராக்கடன் என்பது மிக மிக சொற்பமே. நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலும் சிறு கடன் வாங்கியவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் தொகையின் அடிப்படை யில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில பெரும் பணக்காரர்கள்தான் அதிக கடனை திருப்பி தராமல் உள்ளனர்.

மொத்த கடனில் 30.6 சத வீதத்தை 11 ஆயிரம் பேர் மட்டும் பெற்றிருக்கிறார்கள். இவர்களிட மிருந்துதான் வாராக்கடன் விகிதம் அதிகமாக உள்ளது. இவர்கள்தான் பொதுத்துறை வங்கிகளை நலி வடையச் செய்கிறார்கள். இந்த பெரும் முதலாளிகள் திருப்பி செலுத்தாவிட்டால் வங்கியின் செயல்பாட்டையே முடக்கி விட முடியும். அதே நேரத்தில் சிறு விவசாயிகள், சிறு வணிகர்களிடம் இருந்து வசூலாகும் கடன் தொகை யின் சதவீதம் மிக மிக அதிகம், ஆக, பெரும் முதலாளிகள் வாங்கிய கடனை திருப்பி வசூலிப்பதற்கான உரிய திட்டங்கள் வகுப்பதை தவிர்த்து விட்டு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறுவது, பிரச்சினையை திசை திருப்புவதே தவிர, வேறொன்றும் இல்லை.

தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in