

நடப்பு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவீதத்துக்கு கீழே குறையும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
பொருளாதார ஆய்வறிக்கை யில் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 7% முதல் 7.5% வரை இருக்கும் என்று கணித்திருக்கிறோம். அதே அளவில் வளர்ச்சி இருக்கும். பிரிட்டன் வெளியேற்றம், பருவமழை அனைத்தும் சரியாக இருக்கும் என்று நினைப்பதால் ஜிடிபி கணிப்பில் எந்த மாற்றமும் நாங்கள் செய்யவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதேபோல நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும். கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால் ஒரு சதவீதத்துக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். தங்கத்தின் விலை உயர்ந்து வந்தாலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையில் எந்த பாதிப்பும் இருக்காது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் பாதி அளவுக்குதான் தங்கம் இறக்குமதி செய்கிறோம். அதனால் தங்கம் உயர்ந்தாலும், கச்சா எண்ணெய் சரிந்துவருவதால் மொத்தமாக பெரிய பாதிப்பு ஏற்படாது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால் சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும். இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும். பல வகைகளில் இது முக்கியமானதாகும். தவிர அமெரிக்காவில் நடக்க இருக்கும் தேர்தல் மீதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இருந்தாலும் இந்த நிகழ்வுகளால் இந்தியாவின் பாதிப்பு குறைவாக இருக்கும் என்றார்.