

செயல்பாடுகளுக்கு மீறி அதிகபட்சமாக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) பட்டியலில் இந்தோ அமெரிக்காவைச் சேர்ந்த சந்திப் மாத்ரானி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த `அஸ் யூ செள’ என்ற நிறுவனம் தனது செயல்பாடுகளுக்கு மீறி அதிகமாக ஊதியம் பெறும் 25 தலைமைச் செயல் அதிகாரிகள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சிகோகோவைச் சேர்ந்த ஜெனரல் குரோத் பிராபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தீப் மாத்ரானி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
லாப நோக்கில்லாத நிறுவனமான `அஸ் யூ செள’ நிறுவனம் சூழலியல் மற்றும் நிறுவனங்களின் சமூக கொடை ஆகியவற்றை பற்றி ஊக்குவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தலைமைச் செயல் அதிகாரிகளின் ஊதியங்களை பற்றியும் ஆய்வு செய்து வருகிறது.
4-வது இடத்தை பிடித்துள்ள மாத்ரானிக்கு 3.92 கோடி டாலர் மொத்த ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் 2.6 கோடி அதிகபட்சமாக வழங்கப்படுகிறது என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு ஏற்ப செயல்பாடுகள் இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? என்பது பற்றிய இந்த நிறுவனம் ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சிபிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லெஸ்லை மூன்வ்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2016-ம் ஆண்டில் இவருக்கு 5.67 கோடி டாலர் ஊதியமாக வழங்கப்படுகிறது.
சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மார்க் பென்னியோப் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டில் 3.34 கோடி டாலர் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் டேவிட் ஜாஷ்லவ் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டில் 3.24 கோடி டாலர் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக ஊதியம் பெறும் 25 தலைமைச் செயல் அதிகாரிகள் பட்டியலில் 15 பேர் இரண்டாவது முறையாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 10 பேர் மூன்றாவது முறையாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.