

வெளிநாட்டு பணவரத்து (ரெமிட்டன்ஸ்) பற்றிய தகவலை உலக வங்கி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாம் வளரும் நாடுகளில் ரெமிட்டன்ஸ் தொகை கடந்த 2012-ம் ஆண்டை விட இந்த வருடம் 6.3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
மேலும் வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு ரெமிட்டன்ஸ் தொகையை இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளே பெறும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது.
வளரும் நாடுகளில் இந்த தொகை சீராக வளர்ச்சி அடைந்து 2016-ம் ஆண்டுக்குள் 54,000 கோடி டாலர் அளவுக்கு ரெமிட்டன்ஸ் தொகை இருக்கும் என்று உலக வங்கி கருத்து தெரிவித்திருக்கிறது.
"ஒரு நாட்டில் இருந்து முதலீடுகள் வெளியேறும் சமயத்தில் இந்த பணவரத்து சமப்படுத்தும்.
மேலும் ஒரு நாட்டின் நாணயம் பலவீனமாக இருக்கும் போது இந்த பணவரத்து நாணய மதிப்பை ஸ்திரமாக்கும் என்று உலக வங்கியின் துணைத்தலைவர் மற்றும் பொருளாதார வல்லுனருமான கௌசிக்பாசு தெரிவித்தார்.
2013-ம் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு தொகை வர வாய்ப்பு இருக்கிறது என்ற கணிப்பை உலகவங்கி வெளியிட்டது.
இதன்படி இந்தியா 7,100 கோடி டாலர்களும், சீனா 6,000 கோடி டாலர்களும், பிலிப்பைன்ஸ் 2,600 கோடி டாலர்களும், மெக்ஸிகோ 2,200 கோடி டாலர்களும், நைஜீரியா 2,100 கோடி டாலர்களும், எகிப்து 2,000 கோடி டாலர்களும் ரெமிட்டன்ஸாக பெற வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி சொல்லி இருக்கிறது.
இந்த நாடுகள் தவிர பாகிஸ்தான், வங்கதேசம், வியத்நாம் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் கணிசமாக தொகையைப் பெறக்கூடும் என்றும் உலகவங்கி சொல்லி இருக்கிறது.