

வியாபார மேலாண்மையைக் கலை என்று நினைப்பவர்கள், அதனைக் கல்வி நிறுவனங்கள் மூலம் கற்பிக்கமுடியாது என்று கூறுகின்றனர். மேலாண்மை என்பது ஒரு திறன், அது ஒருவரின் ஆளுமையில் உள்ளடங்கி இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். எனவே, ஒவ்வொருவரின் ஆளுமையும் மாறுபடுவதுபோல், ஒவ்வொருவரின் மேலாண்மைத் திறமையும் வேறுபடும்.
எனவே, ஒருவர் சிறந்த மேலாண்மையாளராகவும் மற்றொருவர் மேலாண்மைத் திறன் இல்லாதவராகவும் இருக்கிறார். மேலாண்மை அறிவியல் கற்றறிந் திருந்தாலும், ஒருவரிடம் உள்ளார்ந்த மேலாண்மைத் திறன் இல்லை என்றால் அவரால், சிறந்த மேலாண்மையாளராக இருக்க முடியாது.
மேலாண்மை அறிவியலில் உள்ள கோட்பாடுகளை வியாபார உலகின் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பது மேலாண்மையை கலை என்று கூறுபவர்களின் முடிவு. இவர்கள் ஒரு பிரச்சனை ஏற்படும்போது பிரச்சினையின் சூழலை அதிகம் கவனிக்கின்றனர். இவர்களுக்கு மேலாண்மை முடிவுகளை எடுக்க சூழல்தான் உதவும், மேலாண்மை அறிவியல் கூறும் கோட்பாடுகள் உதவாது. தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த, மேலாண்மையாளர் தன் அனுபவ அறிவை அதிகம் பயன்படுத்துகிறார். பிரச்சினையின் சூழலுக்கு ஏற்ற முடிவுகளை இவர்கள் எடுப்பர்.
Henry Mintzberg என்பவர் மேலாண்மை ஓர் கலை என்ற நிலைப்பாட்டுடன் மேலாண்மை ஆராய்ச்சி நடத்தியவர். மேலாண்மை செய்பவர்கள், ஒரு கட்டுப்பாட்டுடன் வகுக்கப்பட்ட நியதியில் தினம்தோறும் தங்கள் கடமையை செய்பவர்கள் இல்லை. சூழலுக்கு ஏற்ற பல்வேறு வேலைகளை செய்து கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் எழுதிவைக்கப்பட்ட கோட்பாட்டின்படி செயல்படாமல், தங்களின் திறனை கொண்டு முடிவுகளை மேலாண்மையாளர் எடுப்பார்.
David E Lilienthal என்பவர் மேலாண்மையை ஒரு கலை என்றே கூறினார். மேலாண்மை திறமையுடன், தலைமைப் பண்பும் இணையும்போது சிறந்த மேலாண்மையாளர் உருவாவதாகக் கூறுகிறார். ஓர் கலைஞனின் திறமையுடன் தொழிலாளர் திறனைத் தூண்டும் தலைவராக மேலாண்மையாளர் இருக்கவேண்டும் என்பது இவரின் கருத்து.
Peter Drucker என்ற மேலாண்மை நிபுணரும் இது போன்ற கருத்தை முன்வைக்கிறார். வியாபார சூழல் மாறும்போது, புதிய யுக்திகள் வேண்டும், அதனை ஒரு கலையால் மட்டுமே கொடுக்க முடியும். ஒவ்வொரு மேலாண்மை கோட்பாட்டிற்கும் சில அனுமானங்கள் உண்டு. அந்த அனுமானங்கள் சூழலின் தன்மை ஒரு நிலையில் இருப்பதாக எடுத்துக்கொள்கின்றன. ஆனால் மாறும் சூழலில், அனுமானங்கள் பொய்யாகிவிடுகின்றன. இதுவே, மேலாண்மை கோட்பாட்டினைத் தேவையற்றதாக மாற்றிவிடுகின்றன.