இன்ஃபோசிஸ் நிகரலாபம் 28.6% உயர்வு: பங்கு விலை 52 வார உச்சத்தை தொட்டது
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பினை விட அதிகமாகவே வந்திருக்கிறது.
நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த வருடம் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 26.6 சதவீதம் உயர்ந்து ரூ.3,096 கோடியாக இருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டுடன் (ஏப்ரல்-ஜூன் 2014) ஒப்பிடும்போது 7.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மொத்த வருமானம் 2.9 சதவீதம் உயர்ந்து ரூ.13,342 கோடியாக இருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 4.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
போனஸ் அறிவிப்பு
பங்குகளின் வர்த்தகத்தை அதிகரிக்கவும், சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு வசதியாக போனஸ் அறிவித்துள்ளது இன்ஃபோசிஸ். ஒரு பங்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் 15 வருடங்களுக்கு பிறகு போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 30 ரூபாய் அதாவது 600 சதவீத டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்கின் முக மதிப்பு ஐந்து ரூபாய்.
52 வார உச்சம்
சந்தை எதிர்பார்க்கப்பட்டதை விட சிறப்பான முடிவுகள் வந்ததால், இந்த பங்கின் விலை உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 52 வார உச்சபட்ச விலையான 3,908 ரூபாயை அடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் 6.63 சதவீதம் உயர்ந்து 3,888.65 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. டிஜிட்டல் மாற்றம் எங்களது வாடிக்கையாளர்களின் பிஸினஸை மாற்றி இருக்கிறது. இதில் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் புதிய பிரிவுகளை நோக்கி விரைவாக செல்வோம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்தார்.
வெளியேறுவோர் விகிதம்
நடந்து முடிந்த காலாண்டில் 14,255 பேர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் இந்த காலாண்டில் 10,128 நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள். செப்டம்பர் 30 வரை மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,65,411 ஆக இருக்கிறது. வெளியேறுவோர் அளவு 20.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 17.3 சதவீதமாக இருந்தது.
சிறப்பு தலைவர் பதவியில் இருந்து மூர்த்தி விலகல்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி சிறப்பு தலைவராக இருந்துவருகிறார். அந்த பதவியில் இருந்து விலகுவதாக இயக்குநர் குழுவில் தெரிவித்துவிட்டார். இயக்குநர் குழுவும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது.
