Published : 12 Dec 2013 08:33 PM
Last Updated : 12 Dec 2013 08:33 PM

உலக வங்கி: சூரிய மின் சக்தி உற்பத்தியில் இந்தியா விரைவில் முதலிடம்

ஜவஹர்லால் நேரு தேசிய சூரியசக்தி மின்சாரத் திட்டத்தின் முதல் கட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த பசுமைத் திட்டத்தினால் 30 மெகாவாட்டிலிருந்து 2000 மெகாவாட்டாக இந்தியாவின் சூரிய மின் சக்தி உற்பத்தி உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால், கூடிய விரைவில், சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த மின்சாரத் திட்டத்தால் சூரிய மின்சக்தியின் உற்பத்தி விலை கணிசமாக குறைந்தள்ளது. ஒரு கிலோவாட் சூரிய மின் உற்பத்திக்கான செலவு 0.15 டாலர் என் இருப்பதால், உலகிலேயே மலிவான விலையில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய சூரியசக்தி மின்சாரத் திட்டத்தினால், மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் நிலக்கரி இறக்குமதியை இந்தியா நம்பியிருக்க வேண்டாம்.

இதனால் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும் குறைத்து எரிசக்தி பாதுகாப்பினை வலுப்படுத்தலாம். இந்தத் துறையின் வளர்ச்சி, இந்தியாவின் சுத்தமான ஆற்றல் பங்கை கணிசமாக உயர்த்தும். அதோடு 20-25 சதவிதம் வரை உள்நாட்டு மாசு உற்பத்தியை குறைக்க முடியும்.

"மூன்று வருட காலத்திலேயே, இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தியில் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நாட்டில் 30 கோடி மக்களுக்கும் மேலாக சரியாக மின்சார வசதி இல்லாத நிலையில், பல தொழில் துறைகளும் மின்சார தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், இத்தகைய சூரிய மின்சக்தி உற்பத்தி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவிற்கு பெரிய உதவியாக இருக்கும்" என உலக வங்கியின் இந்திய இயக்குனர் ஒன்னோ ருல் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் 2022ஆம் ஆண்டுக்குள், 20,000 மெகாவாட் உற்பத்தி என்கிற இலக்கை இந்தியா அடைய முதலில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வர்த்தக வங்கிகளின் நிதியுதவியைப் பெறுவதை ஊக்குவிப்பது, சூரிய மின்சக்தி உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துல் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஆஷிஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் சூரிய மின்சக்தி பூங்கா உள்ளிடவை அமைப்பது குறித்தும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குஜாரத்தில் இருக்கும் பூங்காவே, ஆசியாவில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக உள்ளது. அப்படி, அனைத்து தரப்பினரும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான உள்கட்டமைப்பு இருக்கும் பட்சத்தில் மின்சார பரிமாற்றம், சாலை, குடிநீர் வசதிகள் ஆகியவை முன்னேறும். இதனால் சூரிய சக்தி திட்டங்கள் மேம்படுவதோடு அந்தந்த இடங்களில் வேலைவாய்ப்பும் பெருகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x