

வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று வேளாண் வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணில் கண்ணீர் நிச்சயம் வரும்.
விளைச்சல் குறைவு காரணமாக வெங்காய வரத்து குறைந்துள்ளதாக நாசிக்கில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தை குழு (ஏபிஎம்சி) தெரிவித்துள்ளது.
மிகப்பெரும் வெங்காய மொத்த கொள்முதல் சந்தையாகக் கருதப்படும் லஸல்கோனில் 100 கிலோ (ஒரு குவிண்டால்) ரூ. 4,800-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் சில்லறை விற்பனை ஒரு கிலோ ரூ. 55 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 12 ஆயிரம் குவிண்டால் முதல் 15 ஆயிரம் குவிண்டால் வரை சந்தைக்கு வெங்காய வரத்து இருந்தது. இப்போது இது 8 ஆயிரம் குவிண்டாலாகக் குறைந்துள்ளது. இதனாலேயே ஒரு குவிண்டால் விலை ரூ. 3,000 மாக இருந்தது இப்போது ரூ. 4,800 ஆக உயர்ந்துவிட்டது.
எதிர்வரும் துர்கா பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். உயர் ரக வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ. 5,016 வரை விலை போனது. இந்த ரகம் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ ரூ. 75-க்கு விற்பனையானது.