Published : 13 Nov 2013 02:02 PM
Last Updated : 13 Nov 2013 02:02 PM

காலாண்டு முடிவுகள்: கனரா வங்கி, ஹெச்பிசிஎல், ரிலையன்ஸ் கேபிடல், பஞ்சாப் சிந்த் வங்கி, ஹிண்டால்கோ

கனரா வங்கி லாபம் 5.29% சரிவு

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கனரா வங்கியின் செப்டம்பர் காலாண்டு லாபம் 5.29 சதவீதம் சரிந்து ரூ. 625.94 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 660.97 கோடியாக இருந்தது.

இரண்டாம் காலாண்டில் வங்கியின் வருமானம் 13.29 சதவீதம் உயர்ந்து ரூ. 10,427.48 கோடியாக இருந்தது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி திரட்டிய வருமானம் ரூ. 9,203.61 கோடியாக இருந்தது. ஒரு பங்கு ஈட்டும் வருமானம் 14.13 ஆக இருந்தது. முந்தைய காலாண்டில் இது 14.92 ஆக இருந்தது.

வங்கியின் நிகர வாராக்கடன் ரூ. 7,474.07 கோடி. முந்தைய காலாண்டில் இதே காலத்தில் வாராக்கடன் அளவு ரூ. 5,609.53 கோடியாக இருந்தது. நிகர வாராக்கடன் 21.12 சதவீதத்திலிருந்து 2.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஹெச்பிசிஎல் லாபம் 86% சரிவு

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 86 சதவீதம் சரிந்து ரூ. 318.92 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 2,327.09 கோடியாகும்.

லாபம் குறைந்ததற்கு சந்தை விலையைவிட குறைவான விலைக்கு எரிபொருள் விற்பனை செய்ததால் ரூ. 198 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு அதிகமாக இருந்ததால் ரூ. 150 கோடி டாலர் எக்சேஞ்சில் கூடுதலாக செலவானது என்று ஹெச்பிசிஎல் நிதி இயக்குநர் கே.வி. ராவ் தெரிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டு மானியம் இரண்டாம் காலாண்டில் அளிக்கப்பட்டதால் இரண்டாம் காலாண்டு லாபம் அதிகமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால் வருவாய் இழப்பு ரூ. 8,234 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 8,341 கோடியாக இருந்தது.

பஞ்சாப் சிந்த் வங்கி லாபம் 63% சரிவு

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு லாபம் 63 சதவீதம் சரிந்து ரூ. 43 கோடியாகக் குறைந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 117 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 5 சதவீதம் அதிகரித்து ரூ. 1,980 கோடியாக உயர்ந்தது. முந்தைய காலாண்டில் வருமானம் ரூ. 1,886 கோடியாக இருந்தது.

முதல் அரையாண்டில் வங்கியின் லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 165 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 141 கோடியாகும். அரையாண்டு வருமானம் 7 சதவீதம் அதிகரித்து ரூ. 3,981 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 3,730 கோடியாக இருந்தது.

வங்கியின் லாபம் குறைந்ததற்கு வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததே காரணமாகும்.

வங்கியின் வாராக் கடன் 2.17 சதவீதத்திலிருந்து 4.12 சதவீதமாக உயர்ந்தது. செப்டம்பர் வரையான காலத்தில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 3,980.53 கோடியாகும். விருப்ப ஒதுக்கீடு அடிப்படையில் ரூ. 100 கோடிக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்ய இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரிலையன்ஸ் கேபிடல் லாபம் ரூ. 181 கோடி

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த காலத்தில் ரூ. 181 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,869 கோடியாக உயர்ந்தது. காப்பீடு, வர்த்தக நிதி, பரஸ்பர நிதி வர்த்தகம் அதிகரித்ததால் வருமானம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 401 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 2,431 கோடியாக இருந்தது. ஒரே நேர லாபம் தவிர்த்து நிறுவனத்தின் லாபத்தைக் கணக்கிடும்போது 201 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 60 கோடியாகும்.

இதேபோல நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,869 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 1,554 கோடியாக இருந்தது.

ரிலையன்ஸ் கேபிடல் வங்கியல்லாத நிதி நிறுவனமாகும். இது காப்பீடு, பரஸ்பர நிதி, வர்த்தகத் தரகு சேவை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. தனியார் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ள 26 நிறுவனங்களில் ரிலையன்ஸ் குழுமும் ஒன்றாகும்.

ஹிண்டால்கோ லாபம் ரூ. 357 கோடி

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ரூ. 357.11 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபம் ரூ. 358.88 கோடியாகும்.

நிறுவன விற்பனை வருமானம் 2.14 சதவீதம் உயர்ந்து ரூ. 6,245.56 கோடியாக உயர்ந்துள்ளது. செலவினம் ரூ. 183.17 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் செலவினம் ரூ. 27.86 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பர் 20-ம் தேதி சிறப்பு ஒதுக்கீடாக 15 கோடி பங்குகளை முதலீட்டாளர்களுக்கு ரூ. 144.35 கோடிக்கு ஒதுக்கியது. இந்நிறுவனம் ரூ. 1,000 கோடிக்கு நிறுவன கியாரண்டியை உத்கல் அலுமினியா இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அளித்தது.

இந்நிறுவனம் இதன் துணை நிறுவனமாகும். உத்கல் நிறுவனத்துக்கு உள்ள அதிக வட்டி கடனுக்கு மறு நிதி அளிப்பதற்காகக் கியாரண்டி அளித்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x