கார்ப்பரேஷன் வங்கி நிதி மோசடி: சிபிஐ 16 வழக்குகள் பதிவு

கார்ப்பரேஷன் வங்கி நிதி மோசடி: சிபிஐ 16 வழக்குகள் பதிவு
Updated on
1 min read

கார்ப்பரேஷன் வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வு துறை 16 வழக்குகளை பதிவு செய்துள்ளது. கார்ப்பரேஷன் வங்கியின் புதுடெல்லி கிளைகளில் அதன் முன்னாள் அதிகாரிகள் சிலர் நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அந்த வங்கி புகார் அளித்திருந்தது. இதை விசாரணை செய்த மத்திய புலனாய்வு துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுடெல்லி வசந்த் விஹார், வசந்த் குஞ்ச் மற்றும் ஆலி கிளைகளைச் சேர்ந்த முதன்மை மேலாளர், கிளை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வெளி நபர்களுடன் சேர்ந்து ரூ.145 கோடி மோசடி செய்துள்ளனர் என சிபிஐ கூறியுள்ளது.

இதில் வசந்த் குஞ்ச் கிளையில் கடன் மோசடி தொடர்பாக 6 வழக்குகளும், வசந்த் விஹார் மற்றும் ஆலி கிளைகள் மோசடி செய்தது தொடர்பாக தலா 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று இது தொடர்பாக புதுடெல்லியில் 10 இடங்கள், காசியாபாத்தில் இரண்டு இடத்திலும், காந்தி நகரில் ஒரு இடம் உள்பட 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளில் குற்றச் செயல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறினார்.

வசந்த் குஞ்ச் கிளையில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இதற்கு முன்னர் 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஜூலை 1ம் தேதி இது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த நபர்கள் வங்கியை ஏமாற்றும் நோக்கில் பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். கார்ப்பரேஷன் வங்கி அதிகாரிகளும் இவர்களது ஆவணங்களை உரிய வகையில் பரிசீலனை செய்யாமலும், வங்கி நடைமுறைகளை மீறியும் அவசரமாக கடனை அளித் துள்ளனர். இந்த கடன் வாராக்கடன் கணக்கிலும் சேர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடனுக்கு ஈடாக குற்றவாளிகள் அளித்த அடமான சொத்துகள் ஏற்கெனவே வேறு வங்கிகளிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ள என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வகையில் வழங்கப்பட்ட கடன் தொகை மற்றும் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 145.48 கோடி என தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in