Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

லாபம் தரும் பணியிடங்கள்

என் நண்பர் சீனு ஒரு அற்புதமான விற்பனை மேதை. மிகப்பெரும் பதிப்பக நிறுவனர் என்றபோதும் வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கத் தவறாதவர். டாடா குழுமம் தலைமை வரை இவர் வருகைக்கு கதவு திறக்கும். நேரடியாக தொலைபேசியில் அழைத்து பிசினஸ் கொடுக்கும். எனக்கு அந்த பிரமிப்புகளை விட அவரின் ஊக்கமான உரையாடல்களில்தான் கொள்ளை பிரியம்.

ஜப்பானியர்கள் தொழிலில் அமெரிக்கர்களை வீழ்த்திய கதைகளை சிறு உரையாடல்கள் மூலம் நறுக்கென புரிய வைப்பார். அந்த ஆச்சரியம் விலகுவதற்குள் அடுத்த கதை. அடுத்த கான்சப்ட். இப்படி அதிரடியாய் 15 நிமிடங்கள் பேசுவதற்குள் குறைந்தது 5 புத்தகங்களை அறிமுகப்படுத்தி யிருப்பார். விடை பெறும் போது இன்னும் 10 புத்தகங்களை கொடுத்து விட்டு,

“படித்து விட்டு கொடுங்கள்” என்பார். அடுத்த வருகையில் கம்பெனி பெயரில் ஐந்தும் சொந்த கணக்கில் இரண்டாவது வாங்கிக்கொள்வேன்.

அப்படி ஆச்சரியத்தில் எதுவும் தெரியாமல் எனக்காக வாங்கிய புத்தகம் Gemba Kaizen: A commonsense, low-cost approach to Management !

இது நடந்தது 1999ல். பின்னர் 2000ல் நான் தனியாக நிர்வாக பயிற்சிக்கென நிறுவனம் தொடங்கியபோது அதற்கு கெம்பா எனப்பெயரிடக் காரணமாக இருந்தது இந்த புத்தகம் தான்.

அது என்ன கெம்பா? ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை என் விசிட்டிங்க் கார்ட் பார்த்துவிட்டு, “ அது என்ன சார் ஜெம்பா?” என்று கேட்போர் அனைவருக்கும், “அது கெம்பா. வேலை நடக்கும் இடம் என்று ஜப்பானிய மொழியில் பொருள்” என்பேன். “ஓ, ஆஃபீஸா?” என்பார்கள். “அப்படி இல்லை...எங்கு நம் சக்திகள் வேலைக்காக குவிகிறதோ அதுதான் கெம்பா. வரைபடம் வரையுமிடத்திலிருந்து, உற்பத்தி கூடம் முதல், விற்கப்படும் கடை வரை அனைத்தும் கெம்பா தான்! ஆங்கிலத்தில் இதற்கு நிகரான சொல் இல்லை. தமிழில் உண்டு. களம் என்பது தான் சரி!” என்று நான் நித்தம் ஒரு சிறு உரை நிகழ்த்தக் காரணமாய் இருப்பவர் மஸாகி இமாய். அவர் தான் கெம்பா கைசனின் நூல் ஆசிரியர்.

அமெரிக்க கார்களின் விலையைக்காட்டிலும் மிகக் குறைந்த- ஆனால் மிகவும் தரமான- கார்களை ஜப்பானியர்கள் சந்தையில் விட்ட போது அமெரிக்கர்கள் ஆடிப்போனார்கள். அது எப்படி சாத்தியம், இவ்வளவு குறைந்த விலை? என்ன தொழில் நுட்பம் அப்படி ரகசியமாய் வைத்துள்ளனர் என வேவு பார்க்க ஒரு குழுவை அனுப்பியது. எந்த தொழில் நிர்வாகமும் ஆங்கிலத்தில் இல்லை. எல்லாம் ஜப்பனிய மொழியில். தவிர அச்சு அசலாக அமெரிக்க வடிவமைப்பிலேயே அதே உற்பத்தி முறைகள். குழம்பிப்போனார்கள் அமெரிக்கர்கள். ஆனால் ஒன்றே ஒன்று ஜப்பானிய பணியிடங்களில் மிகவும் வித்தியாசமாக கண்ணில் பட்டது. பணியாளர்கள் பணியிடத்தில் உள்ள தரம் சார்ந்த பிரச்சினைகளை சிறு குழுக்களாக உட்கார்ந்து விவாதிக்கிறார்கள். தொடர்ந்து முன்னேற்றங்களை அடிமட்டத்திலிருந்து கொண்டு வருகிறார்கள். இந்த தொடர் முன்னேற்ற இயக்கத்தின் பெயர் தான் கைசன். பணியிடத்தில் நடப்பதால் அது கெம்பா கைசன்!

ஜப்பான் செய்த அனைத்தையும் அமெரிக்கர்களுக்குச் சொல்லும் புத்தகம் தான் இந்தப் புத்தகம்.

அதிரடியாக எல்லாவற்றையும் மாற்றி. மிகுந்த பொருட்செவோடு ரீ- எஞ்சினியரிங் செய்யும் மேற்கத்தியர்களுக்கு கைசன் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

மசாகி இமாய் முதலில் கைசன் பற்றித் தான் புத்தகம் எழுதினார். அது உலக பிரசித்தி பெற்றது. பின் கைசன் சார்ந்த அனைத்து உத்திகளையும் வைத்து case studies கள் மூலம் இன்னும் கனமாக ஒரு புத்தகம் தேவைப்பட்டது என்று உணர்ந்து எழுதிய புத்தகம் இது.

பொறியாளர்களுக்கும் தரக்கட்டுப் பாட்டு அதிகாரிகளுக்கும் தான் இது என்ற தவறான எண்ணம் வாசிக்கத் தொடங்கிய போதே நொறுங்கத் தொடங்கியது. எல்லா பணியிடங்களை லாபம் கொழிக்கச் செய்யலாம். அது எந்த வகைத் தொழிலாக இருந்தாலும் சரி. இதற்கு பெரிய முதலீடோ நடைமுறையில் பெரிய மாற்றமோ தேவையில்லை. நிர்வாகத்தின் நம்பிக்கையும், பணியாளர்களின் பயிற்சியும் தான் மூலதனம்.

கண்ணுக்குத் தெரியாமல் தொலைந்து போகும் லாபத்தை சிறு சிறு தொடர் நடவடிக்கைகளில் தடுத்து நிறுத்தலாம்.

ஒரே ஒரு விஷயத்தை ‘சாம்பிள்’ பார்க்கலாம்: தாய்ச்சி ஓனோ தன் தொழிலாளிகளிடம் அங்கலாய்த்தாராம்: “ ஒரு நாளைக்காவது குறைந்தது ஒரு மணி நேர வேலையாவது செய்வோமே!” கடுமையாக பணியாற்றும் நபர் கூட தொடர்ந்து 8 மணி நேரம் “மதிப்பு கூட்டும்” ( Value adding) செயல்கள் செய்ய முடியாத வேலை அமைப்பு நம்முடையது என்று நிரூபித்தார் அவர். 7 வகை விரயங்களை ( 7 forms of Waste) அவர் பட்டியலிடுகிறார்.

எவையெல்லாம் விரயம்?

தேவைக்கு அதிகமான உற்பத்தி, தேவைக்கு அதிகமான உற்பத்தியான பொருட்களின் தேக்கம், பழுது பார்க்கும் நேரம், தேவையில்லாத வீண் அலைச்சல், தேவையில்லாத பழைய வேலை வழி முறைகள், தேவையில்லாத காத்திருப்பு நேரம், மற்றும் தேவையில்லாத போக்குவரத்து என 7 வகைகளைக் கண்டு பிடித்து முற்றிலும் குறைக்கலாம்.

உங்கள் பணியிடங்களில் எத்தனை விரயம் என்று கணக்கிட்டால் இன்று ராத்தூக்கம் இழப்பது நிச்சயம். “எங்க பிசினஸ்ல இதெல்லாம் சரி செய்ய முடியாது!” என்று தான் பல வாடிக்கையாளர்கள் சொல்வார்கள். அவர்கள் கெம்பா கைசன் புத்தகம் படிக்கவில்ல்லை. அல்லது கெம்பா கைசன் வழிமுறைகளை பின் பற்றவில்லை என்பதுதான் உண்மை.

கெம்பா கைசன் உங்கள் கம்பெனி கலாசாரமாக மாறினால் அது 5 வழிகளில் புலப்படும்:

உங்கள் பொருட்கள்/ சேவைகள் இவைகளின் தரம் கூடும். அவற்றின் உற்பத்தி விலை குறையும். அவை சரியான நேரத்தில் உங்கள் வாடிக்கையாளரைச் சென்றடையும். பணியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் மிகுந்த பாதுகாப்பைத் தரும். பணியாளர்களின் திருப்தியும் பெருமிதமும் அதிகரிக்கும். இவை நிச்சயம். Quality, Cost, Delivery Time, Safety and Morale என்கிற இந்த 5 ஆங்கில வார்த்தைகள் தான் கெம்பா கைசனின் லட்சியங்கள் எனச் சொல்லலாம்!

கனமான அட்டையுடன், வரைபடங்களும் எண்களும் கொண்ட இந்த 354 பக்கப் புத்தகம் ஒரு பொறியியல் பாடப்புத்தகம் போல இருப்பது ஒரு பயத்தை ஏற்படுத்தினாலும் ஜப்பானியரின் எளிய ஆங்கில நடை உங்களை சிரமப்படுத்தாது.

பல நிறுவன மாற்றங்களுக்கு இந்த புத்தகம் வித்திட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதனால் லாபம் குறையும் எல்லா தொழில் கூடங்களுக்கும் கெம்பா கைசன் நிர்வாகத்தை பரிந்துரைப்பது என் வழக்கம்.

இரண்டு வகையான பணியிடங்களை உங்களால் உருவாக்க முடியும். ஒன்று கெம்பா கைசனின் தொடர் முன்னேற்ற தொடர் லாப வழிமுறை.

இன்னொன்று மிகவும் சுவாரசியமானது. “ஆணியே புடுங்க வேண்டாம்!” என்று கலவரமாய் வடிவேல் தன் அப்ரென்டிஸ்களை அடித்து வேலை வாங்கும் கலாட்டா வழிமுறை! நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம்?

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x