பொதுத்துறை வங்கிகள் டிவிடெண்ட் வழங்குவதை தவிர்க்க முடிவு

பொதுத்துறை வங்கிகள் டிவிடெண்ட் வழங்குவதை தவிர்க்க முடிவு
Updated on
1 min read

பண மதிப்பு நீக்கம், வாராக்கடன் அதிகரிப்பு, கடன் வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் நடப்பு நிதி ஆண்டில் டிவிடெண்ட் வழங்குவதைத் தவிர்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நடப்பு நிதி ஆண்டில் அரசாங்க வருமானம் சிறிதளவு குறையக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சில பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே மத்திய அரசிடம் இது குறித்து அறிவித்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளில் இருந்து டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.1,000 கோடிக்கும் கீழே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்கம் காரணமாக வங்கியின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட் டிருக்கிறது. மேலும் கடன் வளர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு 5.3 சதவீதமாக குறைந்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் சரிவு

கடந்த நிதி ஆண்டிலும் (2015-16) பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட 16 வங்கிகள் டிவிடெண்ட் வழங்கவில்லை. 2014-15-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த நிதி ஆண்டில் டிவிடெண்ட் மூன்று மடங்கு சரிந்து ரூ.1,444 கோடியாக அரசுக்கு கிடைத்தது. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் ரூ.1,214 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது.

2014-15-ம் ஆண்டு ரூ.4,336 கோடி டிவிடெண்ட் மூலமாக அரசுக்கு கிடைத்தது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கீழ் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விதிமுறைகளின் கீழ் வரிக்கு பிந்தைய லாபத்தில் 20 சதவீதம் செலுத்த வேண்டும் அல்லது பங்கு மூலதனத்தில் (ஈக்விட்டி) 20 சதவீதம், இந்த இரண்டில் எது அதிகமோ அந்த தொகையை டிவிடெண்டாக வழங்க வேண்டும்.

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப் படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ. 6,30,323 கோடியாக இருக்கிறது. ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி ரூ.5,50,346 கோடியாக மொத்த வாராக்கடன் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in