

இப்போது அரசியல் கட்சிகள் மும்முரமாக பிற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள முயற்சிகள் எடுத்து வருவதை நாம் செய்திகளில் நிறைய பார்த்து வருகிறோம். தனியாகக் கிடைக்காத பலம், மற்ற கட்சிகளுடன் சேரும்போது தனக்கு வாய்க்கும் என ஒவ்வொரு கட்சியும் எண்ணுவதே இதற்குக் காரணமாகும். இதுபோல் பிராண்டுகளும் சமயங்களில் மற்ற பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவர நினைக்கிறது.
“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு”
என திருவள்ளுவர் நட்பு பற்றி கூறுவதுபோல், இப்பிராண்டுகளும் ஆராயாமல் கூட்டு சேர்வது கேடு விளைவிக்கும் என்பதையும், சேர்ந்தபின் விலகுவதென்பது கடினமான ஒன்று என்பதையும் உணர்ந்துள்ளன.
கூட்டணி சேர பிராண்டுகளைத் தூண்டுபவை எவை?
நல்ல தரமான தலைக்கவசத்திற்குப் பெயர்பெற்ற ஸ்டீல்பேர்டு (Steelbird) பிராண்ட், இளைஞர்களிடையே ஒரு தனி அங்கீகாரத்தைப் பெறவிரும்பியது. தன் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்திருந்த எம்டீவி (MTV) பிராண்டுடன் சேர்ந்து புதிய தலைக்கவச வகையை அறிமுகப்படுத்தியது. இரு பிராண்டுகள் இணைந்த (co-branded) இந்த தலைக்கவசம், இளைஞர்களைக் கவரும் வகையில் நவீனமயமான புதிய வடிவங்களைக் கொண்டதாக அமைந்தது.
இது இப்படியிருக்க, இன்னொருபக்கம் எம்டீவி (MTV) இளைஞர்களுக்குப் பிரியமான பெப்ஸி (Pepsi) பிராண்டுடன் சேர்ந்து ஒரு புதிய தொலைக்காட்சி சேனலையே துவங்க இருக்கிறது. இது இளைஞர்கள் ரசிக்கும் இந்திய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது. பிராண்டுகள் இணையும்போது கிடைக்கும் இந்த பிரத்யேகமான அடையாளம், தனியாக இருக்கும்போது ஒவ்வொரு பிராண்டுக்கும் அந்தளவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. வாடிக்கையாளர்களில் ஒரு குறிப்பிட்ட சாராரைக் கவர முயலும்போது இந்த அடையாளமே உறுதுணையாயிருக்கிறது!
சில சமயம், தன்னிடமில்லாத ஒரு திறனை மற்ற பிராண்டுகளிலிருந்து பெற நினைப்பதே, கூட்டணி அமைப்பதற்கான உந்துகோலாக அமைகிறது. தொலைதொடர்புச் சேவையளிக்கும் பிராண்டுகள், குரல், குறுஞ்செய்தி, படம் பரிமாற்றம் மற்றுமல்லாமல் பல்வேறு சிறப்பு சேவைகளையும் அளிப்பது இப்போது சகஜமாகிவிட்டது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கைபேசியின் மூலம் பணம் பரிமாற்றம் எளிதாகவும், நம்பிக்கையானதாகவும் இருக்க வோடஃபோன் (Vodafone), அத்துறையிலிருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) துணைகொண்டு, எம்-பெஸா (m-pesa) என்ற சேவையை அளித்துள்ளது.
இரு பிராண்டுகளுக்குள் போட்டியேதும் ஏற்படுத்தாமல் பரஸ்பர நன்மையையே அளிக்கவல்லது இதுபோன்ற கூட்டணி. புதிய பொருள் தயாரிக்கத் தேவையான தொழில்நுட்ப உதவியைப் பெறவும் இதுபோன்ற கூட்டுமுயற்சி வழிவகுக்கிறது. 200 சிசி இயந்திரத் திறனுக்குக் கீழுள்ள (200 CC Engine), இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் டிவிஎஸ் நிறுவனம் (TVS Motor company) தரத்திற்கும், கடும்போட்டியளிக்கும் விலைக்கும் பிரசித்திப்பெற்றது.
இது வருங்காலத்தில் 200 சிசிக்கு மேல் 500 சிசிக்குள் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு மவுசு இருக்குமென அறிந்து, அதற்கு உதவவல்ல, ஜெர்மனியைச் சார்ந்த பிஎம்டபிள்யூ (BMW Motorrad) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. 2015-ல் வெளிவரவிருக்கும் இக்கூட்டுமுயற்சியின் தயாரிப்புகள், டி விஎஸ் பிராண்டின் வெகுஜன அணுகு முறையையும், பிஎம்டபிள்யூவின் அதிநவீன தொழில்நுட்பத்திறனையும் ஒன்றுசேர்த்து, சந்தையில் பரபரப்பை ஏற்படுத்துமென்பது வல்லுநர்களின் கருத்து.
சிலமுறை ஒரு பிராண்டை விற்றபின் வாடிக்கையாளருக்கு அளிக்கும் சலுகையின் மூலம், அவர் அடுத்த பிராண்டை உபயோகிக்கும் வாய்ப்பு ஏற்படுவதுண்டு. இதுமாதிரியான ஒத்துழைப்பு, முதல் பிராண்டுக்கு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் திறனையும், இரண்டாவது பிராண்டுக்கு புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் வாய்ப்பையும் பெற்று தருகிறது. இவ்வகையிலேயே, 1994ல் கீதாஞ்சலி குழுமத்தால் (Gitanjali Group) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் தங்க அணிகலன் பிராண்ட் கிலி (Gili), ஜெட் ஏர்வேஸுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கிலி பிராண்ட் அணிகலன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புள்ளிகளைக் கொடுத்து, அவற்றைக்கொண்டு ஜெட் ஏர்வேஸில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. புதிய வாடிக்கையாளர்களைக் கொடுக்கவல்ல இதுபோன்ற ஒப்பந்தத்தை 17 விற்பனை அங்காடிகள் (Retail brands), 3 தொலைத்தொடர்புச் சேவை (Telecom brands), 27 தங்கும் உணவகவிடுதிகள் (Hotels), 4 வாகனச் சேவை (Car Rental firms) மற்றும் பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்த பிராண்டுகளுடன் ஜெட் ஏர்வேஸ் ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பிராண்டுகள் கூட்டு சேரும்போது பலன்கள் பன்மடங்காகின்றன. இத்தகைய கூட்டமைப்பு, விமானச் சேவை தொழில்துறையில் (Airline Industry) சகஜம். ஸ்டார் அலையன்ஸ் (Star Alliance), ஸ்கைடீம் (SkyTeam) மற்றும் ஒன்வேல்டு (Oneworld) போன்றவை மிகப்பிரபலமான கூட்டு முயற்சிகள். இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு விமானச்சேவைப் பிராண்டுக்கும், பொதுவான விற்பனை தளம், தடையில்லா வாடிக்கையாளர் பயணம், நீண்டகால வாடிக்கையாளர் விசுவாசப் பலன்கள் பரிமாற்றம், விமானநிலைய வசதிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
இதைக் கருத்திற்கொண்டே ஏர்இந்தியா (Air India), ஸ்டார் அலையன்ஸ் அமைப்பில் சேர்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏர்கனடா (Air Canada), யுஎஸ்ஏர்வேஸ் (US Airways), லுஃப்தான்ஸா (Lufthansa), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) போன்ற 28 பிராண்டுகள் கொண்ட இந்த அமைப்பு 21,900 விமானங்களை தினமும், 195 நாடுகளிலுள்ள 1,328 விமான நிலையங்களுக்கு சென்றடையச் செய்கிறது.
இதில் உறுப்பினராயுள்ள ஒவ்வொரு பிராண்டுக்கும் எண்ணற்ற வாடிக்கையாளர் வசதிகளையும், சிறப்புச் சலுகைகளையும் அளித்து, வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, இது வியூகம் அமைத்துக் கொடுக்கிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை! அணுகூலங்களை அதிகமாகத் தரும் இத்தகைய கூட்டணியில் பிராண்டுகள் நாட்டம் கொள்வதில் வியப்பேதுமில்லை.
அதற்காக இதில் பாதிப்புகளுக்கு வாய்ப்பேயில்லை எனக் கூறிவிடமுடியாது. கூட்டணியிலுள்ள ஒவ்வொரு பிராண்டின் பலம் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதுபோல் அதன் பலவீனமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, விமானக் கூட்டமைப்பிலுள்ள ஒரு பிராண்ட் வாடிக்கையாளர் சேவையில் கோட்டைவிட நேரிடும்போது, அது மற்ற பிராண்டின் நற்பெயரையும் பாதிக்கிறது.
இண்டிகோ நேஷன் (Indigo Nation) என்ற இளவயது ஆடவருக்கான ஆயத்த ஆடைகளை விற்கும் பிராண்ட் சென்ற ஆண்டு ஆராவாரமாக வெளியிடப்பட்ட பெஷாராம் (Besharam) என்ற ஹிந்தி திரைப்படத்துடன் இணைந்து பெஷாராம்.இன் (Besharam.IN) என்ற புதுரக ஆடைவகைகளை அறிமுகப்படுத்தியது. இவை அப்படத்தின் கதாநாயகனின் தோற்றத்தையும், அணியும் ஆடைகளையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.
இளைஞர்களின் மனதை ஆட்கொண்டு பிரபலமாகியிருக்கும் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் இந்தப் படம் சரியாக ஓடாமல், கடைசியில் தோற்றுப் போனதால், புதியதாக உருவாக்கிய பெஷாராம்.இன் பிராண்ட், ஆடை வாங்குவோரிடையே எந்த ஒரு பரவசத்தையும், வாங்கும் ஆவலையும் ஏற்படுத்த முடியாமல் அடங்கிப்போயுள்ளது. கூட்டணியில் ஆதாயம் இருக்குமளவுக்கு பல்வேறு விபரீத விளைவுகளுக்கும் வாய்ப்பிருக்கிறது!
krsvk@jsb.ac.in