

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவு கார்களை ஏற்றுமதி செய்து காமராஜர் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
காமராஜர் துறைமுகத்தில் வாகனங்களை ஏற்றுமதி, இறக்கு மதி செய்வதற் கென பிரத்யேக சரக்குத் தளம் கடந்த 2010-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது, இத்துறைமுகத்தில் இருந்து நிசான் மோட்டார், போர்டு இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தவிர, கோமெட்சு, கோபெல்கோ, கேட்டர்பில்லர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் கனரக இயந்திரங்களும் இத்துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி வரை காமராஜர் துறைமுகத்தில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 183 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 260 கார்கள்தான் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதாவது, இந்த ஆண்டு 7.02 சதவீதம் அதிக மாகும். வரும் 31-ம் தேதிக்குள் 2 லட்சத்து 25 ஆயிரம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. காமராஜர் துறை முகம் இதுவரை மொத்தம் 11 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.