Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

எடை குறைந்த நகைகளுக்கு அதிகரிக்கும் மவுசு

மார்கழி மாதம் முடிந்து தை பிறக்கப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழர் மொழி, பலருக்கும் புது வாழ்வு மலர வழியேற்படுத்தும் என்பதில் வியப்பில்லை. விலைவாசி ஒருபுறம் உயர்ந்தாலும், மண வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது பெரும் சுமையாக பல குடும்பங்களுக்கு அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இதனாலேயே பாரம்பரிய நகைகளை நாடுவது இப்போது குறைந்துள்ளது. எடை குறைந்த அதேசமயம் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளை வாங்குவதாக நகை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தங்க நகை மீதான சுங்க வரி உயர்வு காரணமாக அதிகரித்துவரும் விலை, குறை வான எடையில் நவீன வடிவமைப்பு கொண்ட ஆபரணங்களைத் தேர்வு செய்யத் தூண்டியுள்ளது. பழைய காலத்தில் மணப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டதைப் போல அதிக எடை கொண்ட நகைகளுக்குப் பதிலாக எடை குறைந்த, அதிக வடிவமைப்புடன் கூடிய நவீன டிசைன் நகைகளை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை 50 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தனது மூத்த மகளுக்கு ஒரு லட்சம் ரூபாயில் நெக்லஸ் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் இப்போது தனது இரண்டாவது மகளுக்கு அதே எடையில் வாங்குவதற்கு

ரூ. 1.50 லட்சத்துக்கு மேல் செலவிட வேண்டியிருந்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை, நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்க தங்கத்தின் மீது சுங்க வரி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சர்வதேச சந்தை விலையைக் காட்டிலும் இந்தியாவில் 20 சதவீதம் கூடுதலாக தர வேண்டியுள்ளது.

பிற நாடுகளின் விலை நிலவரத்துடன் ஒப்பிடும்போது அதற்கு இணையான விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் தங்க விற்பனை அதிகரிக்கும் என்று மும்பை வர்த்தகர் ரஜ்னிகாந்த் மேத்தா குறிப்பிட்டார்.

தங்க கட்டிகள் மீதான இறக்குமதி வரி 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோல தங்க நகைகளுக்கு 15 சதவீத வரி விதிக்க்பபட்டது.

இதனால் இறக்குமதிக்கு அதிகம் செலவிட வேண்டியிருந்தது. இந்த அளவுக்கு ஏற்றுமதி மூலமான வருமானம் இல்லாததால் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 4.8 சதவீதமாக அதிகரித்தது. இத்துடன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 சதவீத அளவுக்கு சரிந்தது. இதனால் பெரும்பாலான பொருள்களின் விலை உயர்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் தங்க நகை அணியும் மரபை தகர்க்கும் வகையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்துக்களின் மரபுப்படி உலகைப் படைத்த பிரம்மா, தங்க முட்டையிலிருந்து உருவானவராகக் கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் கையிலிருந்து வருபவையும் தங்க நாணயங்களாக உருவகிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் ஒரு வீட்டுக்கு மணப் பெண்ணாக செல்பவளுக்கு தங்க நகைகளை அணிவித்து அனுப்புவது மரபாக உள்ளது.

இந்தபோதிலும் அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக இறக்குமதி 32 சதவீத அளவுக்கு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தங்கம் இறக்குமதியில் இதுவரை முதலிடத்திலிருந்து வந்த இந்தியா, இந்த ஆண்டு அந்த இடத்தை சீனாவுக்கு விட்டுத் தர வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

வரி அதிகரிப்புக் காரணமாக அரசுக்கு கணிசமான வருவாய் வந்தாலும், பற்றாக்குறை குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. அதேசமயம் தங்கம் கள்ளக்கடத்தல் மூலம் இந்தியாவுக்குள் நுழையும் அபாயமும் உள்ளது.

இதுவரை 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. விமான நிலையத்தில் மட்டுமே கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்த அளவே. இந்த ஆண்டு பெருமளவில் தங்கம் இந்தியாவுக்குள் வரும் என தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் மூன்றாம் காலாண்டில் தங்க விற்பனை 125 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ள தங்கத்தில் பெருமளவு தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

தங்கத்தை விரும்பாதவர் இருக்க முடியாது. வாழ்வில் ஒருமுறைதான் திருமணம் நடக்கப் போகிறது. விலை உயர்ந்து விட்டது என்பதற்காக பிடித்தமான தங்க நகைகளை வாங்காமல் இருக்க முடியாது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x