வணிக நூலகம்: குழுக்களின் வெற்றி

வணிக நூலகம்: குழுக்களின் வெற்றி
Updated on
3 min read

வெற்றி என்பது சாதாரண செயல் களை மிகச் சரியாக செய் வதும் மிகவும் உன்னதமான கோட்பாடுகளை பின்பற்றுவதும் அல்ல. பொது அறிவைக் கொண்டு எட்ட முடியாத உயரத்தில் ஒழுக்கத்தையும், விடாப்பிடியான முயற்சிகளையும் செய்து முடிக்கும் செயற்கரிய செயல். புதிய நிறுவனம் ஏகப்பட்ட முதலீடு. உலக தரம். பொருட்களின் விற்பனையோ உச்சத்தில். நிர்வாகிகளோ நிறுவனங்களின் அளவில் மிகச்சிறந்த புகழ் பெற்றவர்கள். எந்த விதமான விளக்கங்களும் இல்லாமல் எந்த காரணமும் இல்லாமல் இந்த நிறுவனம் வெற்றியை தவற விடுகிறது.

மிகவும் எதிர்பார்க்காத வழிகளில் அடையும் அந்த வெற்றி பிறழ்ச்சிகள் ஏன் நடைபெறுகின்றன. ஐந்து வகை யான செயல் பிறழ்ச்சிகளை இந்த சூழ்நிலை மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. படிக்கட்டுகளின் இடையில் இருக்கும் ஓட்டைகள் பெரிதானால் படிக்கட்டுகளே காணாமல் போய்விடும். எதிர் நோக்கும் பொருள் சரிவர தெரியா விட்டால் விபத்தை தவிர வேறு வழியில்லை. என்னவோ ஏதோ என்று எங்கோ நினைவை நிறுத்தினால் இங்கு இருக்கும் நிறுவனம் எவ்வாறு செயல் படும். இது போன்ற சில அடிப்படை ஐய வினாக்களுக்கு விடை காண் பதை, குழுக்களின் செயல் பிறழ்ச்சி என்ற நூலில் பாட்ரிக் லென்சியொனி (PATRICK LENCIONI) என்ற நூலாசிரியர் மிக அருமையாக எடுத்துக் கூறுகிறார்.

செயல் பிறழ்ச்சிகள் சாதாரணமாக ஏற்படக் கூடியவைதான். அவைகளை சிறைப்படுத்தாவிட்டால் நிறுவனம் சிதைந்து போய்விடும். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் செயல்கள் பிறழ்ந்து போய்விடும். ஆதாரமான பிரச்சினை என்னவென்று சரியான முறையில் ஆய்வு செய்து அதைக் கண்டறிந்து அந்த பிரச்சினையின் ஆணிவேரை அறுத்து விட்டால் செயல்களில் பிறழ்ச்சி இருக்காது. நிறுவனங்கள் சிதைந்து போகாது. நூலாசிரியர் ஐந்து வகையான செயல் பிறழ்ச்சிகளை பற்றி சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

முடிவுகளில் கவனமின்மை

நிறுவனங்களில் ஏற்படும் நிகழ்வுகள், மேற்கொள்ளும் முடிவுகள், நடைமுறை சாத்தியங்கள் இவை எவை பற்றியும் கவலைப்படாமல், அவை குறித்து எதையும் உற்று நோக்காமல் கவன சிதறல்கள் ஏற்படும் பொழுது, குழுவின் பங்களிப்பு பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் நான் என்ற உணர்வு, தனித்தகுதி எனக்கு இருக்கிறது என்ற எண்ணம் முடிவுகளில் கவனத்தை சிதற வைக்கிறது. முடிவுகளும் விளைவுகளும் நிறுவன இலக்குகளை ஒட்டியதாகும். தனிநபர் தொடர்பாக இல்லாமல் இருத்தல் செயல் பிறழ்வுகளை தவிர்த்து செயல் நிறைவுகளைக் கூட்டும்.

தட்டிக்கழித்தல்

பொறுப்புகளை தட்டிக்கழிப்பது என்பது சிலருக்கு இனிப்பு சாப்பிடுவது போல. கால் பந்து மைதானத்தில் எவ் வளவு வேகமாக பந்தை தன்னிடம் இருந்து மற்றவர்களுக்கு கடத்து கிறார்களோ அதே போன்று தன்னிடம் உள்ள பொறுப்பை பிற குழு நபர்களுக்கு தட்டி விடுபவர்களால் குழு வெற்றியடை யாது. சில நேரங்களில் தங்களுடைய செயல் திறன்களை குறைத்துக் கொண்டு, மற்ற குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை வேடிக்கை பார்ப்பது செயல் பிறழ்ச்சிக்கு முக்கிய காரணி யாகும். பொறுப்புகளை தட்டிக்கழிக் காமால் குழு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் குழுக்களின் நம்பகத்தன்மையை வளர்க்க முடியும் அதே போன்று நம்பகத்தன்மை அதிகரிக்கும் பொழுது பொறுப்புகளை ஏற்க உறுப்பினர்கள் தயாராவார்கள்.

ஈடுபாடு இல்லாது இருத்தல்

குழு இலக்குகளில் வேறுபாடுகளை ஏற்படுத்தி தன் முயற்சியை பெரிதாக காட்டிக்கொள்ளும் பொழுது, குழு உறுப்பினர்களின் செயல்களில் பிறழ்ச்சி காணப்படும். நிறுவன இலக்கு களும், குழு இலக்குகளும் ஒன்றுக் கொன்று இணைந்ததாக இருக்கும் பொழுது அவைகளை தனிநபர்கள் ஈடுபாடு இல்லாத காரணத்தால் வெற்றி யின் விளிம்பிற்கு கொண்டு செல்ல தவறுகிறார்கள். குழு உறுப்பினர்களின் ஈடுபாடு வேறுபட்டு இருந்தால் இலக்கு களை அடையும் முயற்சிகள் தோல்வி யடையும். பொறுப்புகளை தட்டிக்கழிக் கும் பொழுது தங்களுடைய வெகுவான திறமைகளை குறைவாக வெளிப்படுத்தி மற்றவர்களிடம் இயல்பாக இருக்கும் பொழுது அவர்கள் தங்களைத் தாங்களே மட்டும் ஏமாற்றிக் கொள்வது இல்லை. மாறாக, நம்பி கூடி இருக்கும் குழுக்களையும் செயல் பிறழ்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள்.

குழப்பங்களை எண்ணி அஞ்சுதல்

குழப்பங்களில் இருந்து தெளிவு பெறுவது என்பது அலைகள் நிற்பதற்கு ஒப்பாகும். குழப்பங்கள் தீர்வது கிடையாது, குழப்பங்களை தவிர்க்க முடியாது. இயந்திர கதியில் எண்ண வேறுபாடுகளை உணர்ந்து கொள்ள முடியாது. மனித இயக்கத்தில் உணர்வு களும் மெய்பாடுகளும் குழப்பத்தின் ஊற்றுக்கண். உண்மையான அன்பை யும் தன்மையான பரிவையும் மெய்பாடு மற்றும் உணர்வுகள் மூலம் சரியாக அறிந்துக்கொள்ள முடியாதவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி குழுவின் செயல் திறனை குறைத்து விடுகிறார்கள். எனவே, குழப்பங்களுக்கு காரணிகள் என்னவென்று அறிந்து முடிந்தவரை அவைகளை பேசி களைந்து வெளி வருவது சிறப்பானதாகும். குழப்பங் களை எண்ணி அஞ்சுவதை தவிர்த்து குழுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருத்தல் அவசியம்.

நம்பிக்கை

குழுக்களை இணைப்பது நம் பிக்கை. நிறுவனத்தின் பல இடங்களில் உள்ள பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு அழகான கோலமாக மாறுவதற்கு நம்பிக்கை கரம் நீட்டுகிறது. குழு உறுப்பினர்கள் பாதிப்பற்ற நிலையை நிலை நிறுத்துவதற்காக தங்களின் இயல்பை மாற்றி காட்டிக் கொள்வார் கள். அதுபோன்ற நேரங்களில் குழு உறுப்பினர்களின் நம்பிக்கை கேள்வி குறியாகும். பாதிப்புகளை ஏற்றுக் கொண்டு பாதிப்புகளில் இருந்து எவ் வாறு வெளிவருவது என்ற செயல்பாடு கள் குழுக்களின் பங்களிப்பை ஊக்கப் படுத்தும். ஆக நம்பிக்கை என்பது இணைப்பு புள்ளிகளால் ஏற்படுத்தக் கூடிய அற்புதமான கோலம் என்றால் மிகையாகாது. நம்பிக்கையின்மையால் சில இடங்களில் புள்ளிகள் சரியாக இணைக்கப்படாவிட்டால் கோலம் அலங்கோலமாகிவிடும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்றோ ஒன் றுக்கு மேற்பட்டவைகளோ தனித்தோ, இணைந்தோ ஒன்றோடு ஒன்று தொடர்பு களை ஏற்படுத்திக்கொண்டோ செயல் பிறழ்ச்சிகளுக்கு வழிவகுகின்றன. செயல் பிறழ்ச்சிகள் குழுவின் எதிர் கால இலக்கையும், பணியையும் பாதிக்கும். குறைபட்ட செயற்கை யான செயல்களை செய்யும் பொழுது குழுக்கள் மட்டுமின்றி நிறுவனமும் பாதிக்கப்படு கின்றது. குழப்பங்களால் ஏற்படக்கூடிய பயங்களை சரியான முறையில் குழு உறுப்பினர்களிடம் கலந்து பேசி தீர்வுகளை ஏற்படுத்தாவிட்டால் அவை செயல் பிறழ்ச்சியை ஏற்படுத்தி குழுக்களின் ஒன்றுபட்ட தன்மையை பாதித்து எதிர்காலத்தில் தோல்வி முட்களால் குத்தப்படும்.

இவைகளை அடைவதற்கு மிகப்பெரிய சாதனை களோ, மலை அளவு வெற்றிகளோ தேவையில்லை மிகச் சாதாரணமான புரிந்துணர்தலும், பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுதலும் முடிவுகளில் கவனம் செலுத்துதலும், குழப்பங்களை தீர்த்துக் கொள்ளுதலும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதலும் என்றால் மிகையாகாது. உங்கள் குழுக்களில் ஏற்பட்டுள்ள இது போன்ற செயல்களை தவிர்த்து, செயல் பிறழ்ச்சிகளை தவிர்த்து செயல் நிகழ்ச்சிகளை ஏற்படுத்துங்கள்.

- rvenkatapathy@rediffmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in