

பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய கிரித் பாரிக் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு டீசல், கேஸ் மற்றும் மண்ணெண்ணை விலையை உடனடியாக உயர்த்தக் கோரி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. ரூபாய் 72,000 கோடி மானியமாக வழங்கப்படுவதைத் தடுக்க, இந்த விலை உயர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கவும், மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கவும், கேஸ் சிலிண்டர் விலையை ரூ. 250 உயர்த்தவும் பாரிக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், தற்போது மானிய விலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் என வழங்கப்படுவதை 6-ஆக குறைக்க வேண்டும் என்றும் பாரிக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த தகவலை புது தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் குழுவின் தலைவர் கிரித் பாரிக்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு தீவிரமாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது என்றும், நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாரிக் குழுவின் அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.