ஆர்பிஐ அறிவிப்பால் வங்கிகளுக்கு நெருக்கடி குறைந்தது: இந்தியா ரேட்டிங்க்ஸ் தகவல்
வங்கிகள் பேசல் 3 கட்டுப்பாட்டு நிலையை எட்டுவதற்கான கால வரம்பை மார்ச் 2019 வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. வியாழக்கிழமை ஆர்பிஐ வெளியிட்ட இந்த அறிவிப்பால் வங்கிகளுக்கு நெருக்கடி குறைந்துள்ளதாக தரச்சான்று நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா ரேட்டிங்ஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில், இத்தகைய கால நீட்டிப்பானது வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தை தளர்வடையச் செய்து விடக் கூடாது. இப்போது வழங்கப் பட்ட கால அளவிற்குள் அதை வங்கிகள் எட்ட வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும்.
இருப்பினும் வங்கிகளின் முதலீட்டு அளவை அதிகரிப் பதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியும். மேலும் ஓராண்டு சலுகைக் காலத்தில் பேசல் 3 இலக்கை வங்கிகள் எட்ட உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் அரசுக்குள்ள முதலீட்டு அளவை அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் டயர் 1 மூலதனமாக வங்கிகள் ரூ. 26 ஆயிரம் கோடியை வைத்திருக்க வேண்டும் என்று முந்தைய ஆர்பிஐ வழிகாட்டு முறை அறிவுறுத்தியது. அத்துடன் ரூ. 11,200 கோடியை பொது பங்காக நடப்பு ஆண்டில் அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி பங்குகள் உயர்வு
பேசல் 3 விதிமுறைகளை நடைமுறை படுத்துவதற்கான காலக்கெடுவை மார்ச் 2019-ம் ஆண்டு வரை தள்ளிவைத்தது. இதன் காரணமாக வெள்ளிக் கிழமை வர்த்தகத்தில் வங்கிப் பங்குகள் உயர்ந்தது. பி.எஸ்.இ. பேங்கெக்ஸ் குறியீடு 1.19 சதவீதம் (171.01 புள்ளிகள்) உயர்ந்து 14585 புள்ளியில் முடிவடைந்தது.
முக்கியமான பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. 3.54 சதவீதம், பேங்க் ஆஃப் பரோடா 5.17 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியா 7.58 சதவீதம், கனரா பேங்க் 6.53 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி 6.70 சதவீதம், யெஸ் பேங்க் 2.77 சதவீதமும் உயர்ந்தது.
