

சில நாட்களுக்கு முன்பு கார்கள், வைர நகைகள், வீடு உள்ளிட்டவற்றை தனது ஊழியர்களுக்கு போனஸாக அறிவித்தார் சூரத் நகரைச் சேர்ந்த ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிறுவனம் வழங்கிய போனஸ். சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த நிறுவனத்தின் நிறுவனர் சவ்ஜி தோலகியா பேட்டியளித்தார்.
இந்த பேட்டியில் பணியாளர்கள்தான் எல்லாம், அவர்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்று குறிப்பிட்டார். மேலும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
4-ம் வகுப்பு வரைக்குமே என்னால் படிக்க முடிந்தது.அதன் பிறகு என்னால் படிக்க முடியவில்லை. என்னுடைய 12 வயதில் வைரத் துறைக்கு நான் வந்தேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என்னுடைய பணியாளர்கள்தான் காரணம். அவர்கள் பொறுப்பாக இருந்த தால்தான் இது சாத்தியம் ஆயிற்று.
நான் ஒரு வியாபாரி. நிறைய வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். நிறைய கிடைக்கிறது. அதனால் மற்றவர்களுக்கு கொடுக்கிறேன். இதில் யாருக்கும் எந்தவிதமான சாதகமும் நான் செய்யவில்லை. மேலும் கடவுளின் ஆசிர்வாதமும் எனக்கு இருந்தது.
1991-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். முதல் வருடம் எங்களது ஏற்றுமதி ஒரு கோடி ரூபாய். இப்போது 6,000 கோடி ரூபாய். இப்போது 21 மாநிலங்களில் எங்களுக்கு பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றார்.
நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்களே நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட்டா என்று கேட்டதற்கு எனக்கு கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. குஜராத்தியில் அதற்கு எதாவது வார்த்தை இருக்கிறதா என்று தொலைக்காட்சி நிருபரிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.
மேலும், உரையாடுவதற்கு வசதியாக கொஞ்சம் ஹிந்தி தெரியும் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார். இதுவரை எந்த பணியாளரையும் நாங்கள் நீக்கியதில்லை. ஆனால் 2 முதல் 3 சதவீத ஆட்கள் சரியான பயிற்சி இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்து மீண்டும் அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.