Last Updated : 10 Jun, 2016 10:27 AM

 

Published : 10 Jun 2016 10:27 AM
Last Updated : 10 Jun 2016 10:27 AM

வணிக நூலகம்: நீ, நான் உளவியலின் ஆறு கோட்பாடுகள்

ராபர்ட் சியால்டினி என்ற நூலாசிரியர் நாம் எவ்வாறு மற்றவர்களை சம்மதிக்க வைக்கின்றோம், எவ்வாறு சில நேரங்களில் மனமில்லாமல் சில விஷயங்களை ஒப்புக்கொள்கிறோம் என்பதைப் பற்றி மிக அழகாகக் கூறியுள்ளார்.

சில வேளைகளில் முகத்தில் அடித் தால் போன்று சில செய்திகளையும், வேறு சில நேரங்களில் அமைதியான நடையிலும், ஈடுபாட்டுடன் நம்மை படிக்கவைக்கின்றார். GAME THEORY அடிப்படையில் ஆறு கோட்பாடுகளை எடுத்துக்கூறி அவைகளை வெகு அழகாக நிறுவிக் காட்டுகிறார்.

திருப்பி அளித்தல்

சீரான அர்ப்பணிப்பு

சமூக அடையாளம்

அதிகாரம்

விரும்புதல்

பற்றாக்குறை

திருப்பி அளித்தல்

நமக்கு மற்றவர்கள் எதை கொடுத்தார்களோ அதற்கு ஈடான வகையில் வேறு சிலவற்றை திருப்பி கொடுத்தல் என்ற விதியை நாம் ஏற்படுத்திக் கொள்கின்றோம். நமக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பொருளாகவோ, செயலாகவோ அளிக்கும் பொழுது நமக்குள் நாம் அதை திருப்பி தர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. உதாரணமாக யாரேனும் ஒரு நண்பர் மதிய உணவோ, காபியோ, தேநீரோ அல்லது குளிர்பானமோ வாங்கிக் கொடுத்தால் அவருக்கு நாம் திரும்ப ஏதேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இதைத்தான் திருப்பி அளித்தல் கோட்பாடு என்று கூறுகிறார்.

சீரான அர்ப்பணிப்பு

சில நேரங்களில் நாம் ஒரு முடிவை எடுத்தாலோ அல்லது ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாலோ தொடர்ந்து அதை போல செயல்படவும், எண்ணவும் முயற்சிக்கின்றோம். சில நேரங்களில் அது போன்ற அழுத்தமான சூழ்நிலைகள் நாம் முதலிலேயே எடுத்த முடிவுகள் சரியானவை என்ற எண்ணத்தை நம்முள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கடைசி வரை பிரியமாட்டேன் என்று ஏற்கெனவே எடுத்த முடிவால் மண முறிவுக்கு மனம் அலைபாய்ந்தாலும் மண வாழ்க்கையிலேயே தொடர பிரயத்தனப்படுகின்றது.

முதல் முதலாக ஒரு நீண்ட தூரப் போட்டிக்கு தயாராகும் பொழுது இன்னும் மூன்று மாதங்களில் நீண்ட தூரம் ஓடப் போகிறேன் என்று காண் போரிடம் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இந்த சீரான அர்ப் பணிப்பு இல்லை என்றால் பேசாமல் இருப்போம். அதனால்தான் நீண்ட தூர ஓட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள சீரான அர்ப்பணிப்பு உதவுகிறது.

சமூக அடையாளம்

இதை ஆட்டு மந்தை மனப்பாங்கு என்றால் மிகையாகாது. நண்பர்கள் அனைவரும் ஜீன்ஸ் பேன்ட்டை எவ்வளவு கீழே போடுகிறார்களோ அதை போலவோ அல்லது அதை விட கீழாகவோ ஏன் என்றே தெரியாமல் போட்டுக் கொண்டு எல்லோரையும் பார்த்து சிரிப் பது. எல்லோரும் சிரிப்பதால் என்ன வென்றே தெரியாமல் சிரித்து வைப்பது போன்றவை உதாரணங்கள் ஆகும். சில நேரங்களில் எல்லோரும் தேடிக் கொண்டிருப்பதால் என்னவென்றே தெரியாமல் எதற்காக தேடுகின்றார்கள் என்று அறியாமலேயே தேடத் துவங்குவது இன்னொரு உதாரணம்.

அதிகாரம்

சிறு வயதில் இருந்தே அதிகாரத்திற்கு கீழ்படிதல் சரி என்றும், அதிகாரத்திற்கு கீழ் படியாமல் இருப்பது தவறு என்றும் ஆழ்மனதிற்குள் ஒரு கருத்தை தூக்கி எறிந்திருப்பார்கள். அதனால் பெரும் பான்மையானவர்கள் அதிகாரம் மற்றும் மதிப்பும் உள்ளவர்களை பின்பற்றத் தொடங்குகிறார்கள். காவலர்கள், தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள், அலுவலக மேலாளர்கள் இவர்களை பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு கீழ்படிதல் ஏற்படுகின்றது. முனைவர் அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என்றதும் நம்மை அறியாமல் அவர்கள் சொற்களில் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

மிக நேர்த்தியான உடை அணிந்திருப்பவர்களுக்கு கிடைக்கும், அங்கீகாரம் உடைகளை நேர்த்தியாக அணியாதவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது இன்னொரு எடுத்துக்காட்டு.

விரும்புதல்

நமக்கு பிடித்தவர்கள் மற்றும் தெரிந் தவர்கள் ஆகியோர் கருத்துகளை காரணமே இல்லாமல் ஏற்றுக்கொள் கிறோம். விரும்புதல் எவ்வாறு அல்லது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு ஐந்து காரணிகள் கூறப்படுகின்றது.

உடல் வசீகரம், கவர்ச்சிகரமான உடல் அமைப்பு உள்ளவர்கள் அணியும் எந்த ஆடைகளும் விரும்புதலை வளர்க்கும். உதாரணம் கிம் கார்டாசியா என்ற நபர் அணிந்திருக்கும் ஆடைக்கு ஒரு கோடி விரும்புதலை முகநூலில் பெற்றார். அது ஆடையின் வசீகரம் அல்ல ஆளின் வசீகரம்.

ஒரே மாதிரி இருத்தல்

சில நேரங்களில் கருத்துகளாலும், ஆளுமையினாலும், பின்புலன்களி னாலும், வாழ்க்கை முறைகளினாலும் சில நிகழ்வுகள் ஏற்படும், பள்ளியில் படிக்கும் பொழுது விளையாட்டில் ஒரே கருத்து உடையவர்கள் விளை யாட்டிலும், கேளிக்கையில் நடனம், நாடகத்திலும் அல்லது ஏதேனும் ஒரு குழுவிலோ தங்களை இணைத் திருப்பார்கள். எந்த குழுவிலும் சேராதவர் கள் ஒரு தனிக் குழுவாக இருப்பார் கள். தம்பதிகளும் ஒருவரை போல மற்ற வர்கள் இருப்பதாக காட்டிக்கொள் வார்கள்.

ஒத்துழைத்தலும் விருப்பத்தை வளர்க்கும். நம்முடன் பணிபுரிபவர்களை நாம் விரும்புவோம் நம்மை எதிர்த்து பணிபுரிபவர்களை விரும்புவது இல்லை. ஒரே இலக்கை நோக்கி ஒன்றாக பணிபுரிபவர்கள், ஒரே சார்பு உடையவர்களாக இருக்கும் பொழுது சக்தி மட்டும் அல்ல வெற்றியும் நிச்சயம். 2008-ம் ஆண்டு ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்திய ‘YES WE CAN’ என்ற வார்த்தைகள் எந்த வகையான விளைவை ஏற்படுத்தியது? விரும்புதலை எப்படி வளர்த்தது? என்பது சரித்திரச் செய்தி. விளையாட்டுக் குழுக்கள் வெற்றி பெறும் பொழுது எவ்வாறு ஒத்துழைப்பு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கிறது? வெற்றி பெறுவதற்கு ஒருவருக்கொருவர் உள்ள விரும்புதலே காரணமாகும்.

பற்றாக்குறை

இந்த கோட்பாடு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக மதிப்பிடப்படும். அதாவது நடத்தைப் பொருளாதார நிபுணர்கள் (Behavioral Economist) குறிப்பிடும் பொழுது, இழப்பு தவிர்ப்பு லாபத்தை விட மிகவும் வலிமையானதாக மக்களை ஆட்டுவிக்கின்றது என்று குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் நஷ் டத்தை பற்றிய பயம், லாபத்தை பற்றிய எண்ணத்தை விட மிகவும் அதிகம். சில நேரங்களில் LIMITED EDITION என்று கார்கள் விளம்பரப் படுத்தப்படுக் கின்றன. பற்றாக்குறை பாய்ந்து சென்று கார்களை வாங்க தூண்டுகின்றது. கடைசி நாள் என்று சொல்லி விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் நிறைய கடைசி நாட் களை விளம்பரப்படுத்துவதை காண் கின்றோம். இப்போதே வாங்கினால் விலை குறைவு மற்றும் விலை உயரும் அபாயம் இருப்பதால் உடனடியாக பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த கோட்பாட்டின் அடிப்படை யில் எழுகிறது. மற்றவர்களிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது என்ற உணர்வு பற்றாக்குறையை பாடாய்ப் படுத்துக்கின்றது.

பற்றாக்குறை கோட்பாடு சில நேரங்களில் சிலரிடம் ஆர்வத்தை தூண் டும். நமக்கு திரும்பவும் போன் செய்யாத வர்களையும் அல்லது மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு நம்மை போன் செய்ய செய்பவர்களும் இந்த கோட்பாட்டிற்கு கீழ் வருகின்றார்கள். அதாவது அந்த நபர்கள் தொடர்பு பற்றாக்குறையால் நம்மை ஈர்க்கிறார்கள்.

நூலாசிரியர் கூறியதை போல நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இந்த காரணிகளை நாம் தெளிவாக தெரிந்துக் கொண்டால் தடைகளை தாண்டி மன உளைச்சலை மூடி மகிழ்ச்சியையும் நிம்மதியையும் திறக்கும் திறவு கோல்களை நாம் கை கொண்டதாக உணருவோம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x