

வரி ஏய்ப்பு செய்வோரின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் சமையல் எரிவாயு மானியத்தை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வரி செலுத்துவதற்கு போதிய வசதியிருந்தும் வரி ஏய்ப்பு செய்வோர் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகையோர் வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நடப்பு நிதி ஆண்டில் எடுக்கலாம் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை கருதுகிறது.
எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது. இதன் மூலம் இத்தகையோர் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். வாராக் கடனை செலுத்தாதவர்களின் கணக்குகள் எந்த அடிப்படையில் கையாளப்படுமோ அதேபோல `பான்’ எண் முடக்கப்பட்டவர்களின் சேமிப்புக் கணக்கும் கையாளப்படும்.
இது தவிர பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வோரது கணக்கில் செலுத்தாமல் கிரும்பப் பெறலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்வோரை தண்டிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட `பான்’ அட்டை விவரங்கள் சொத்து பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எவ்வித அசையா சொத்துகளை பதிவு செய்ய முடியாது.
அதேபோல வரி ஏய்ப்பாளர்களின் விவரம் அனைத்து வரி அலுவலகங்களுக்குமக் அனுப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது தடுக்கப்படும்.
இது தவிர கடன் பெற்றவர்கள் மற்றும் அதை சரியாக திரும்ப செலுத்தாதவர்கள் விவரங்களை அளிக்கும் சிபில் அமைப்பின் தகவல் தொகுப்பை பெறவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வோரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். அத்துடன் அவர்களது சொத்துகளை முடக்கவும் வழியேற்படும்.
கடந்த ஆண்டுதான் வருமான வரித்துறை வெட்கப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தொடங்கியது. ரூ. 20 கோடிக்கும் அதிகமான வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுவரையில் 67 நிறுவனம் அல்லது தனி நபர்களின் பெயர்கள் வருமான வரித்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டிலிருந்து ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு என்பது வரித்துறைக்கு தீராத் தலைவலியாக இருந்து வருகிறது. வரித்துறை மேற்கொள்ளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.