

ஊழல், மோசடி வழக்கில் தொடர்புடைய சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவு செய்ததையடுத்து நான்கு இடங்களில் சோதனைகளை முடித்துள்ளது. ரூ.209 கோடி வங்கி பணத்தை முறைகேடான வழியில் ஊழல் செய்தது தொடர்பாக சிண்டிகேட் வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரி மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முக்கிய பில்டருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஏ கே திவாரி, ஆதர்ஷ் மான்சந்தா, முன்னாள் தலைமை மேலாளர் தேஷ்ராஜ் மீனா மற்றும் சந்தோஷ் குப்தா ஆகியோருக்கு எதிராக குற்றச் சதி, ஏமாற்றுதல், மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிஐ தகவலறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
தணிக்கையாளர் பாரத் பாம், அவரது மைத்துனர் பவித்ரா கோத்தாரி, பணியாளர்கள் வினீத் ஜெயின், பியூஷ் ஜெயின் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் உலக வர்த்தக பூங்காவைக் கட்டிய பில்டர் அனூப் பாட்டியா மற்றும் சங்கர் லால் கண்டேல்வால் ஆகியோரும் வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் குறிப் பிட்டனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் சிண்டிகேட் வங்கி கிளைகளில் வீட்டுக் கடன் மற்றும் கடன் வசதிகளை பெற இவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே கவுர் தெரிவித்தார். சிண்டிகேட் வங்கியைச் சேர்ந்தவர்களே பணத்தை பட்டுவாடா செய்துள்ளனர். இதனால் வங்கிக்கு ரூ.209 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜெய்ப்பூர், அஜ்மீரில் உள்ள அவர்களது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட நான்கு இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த ஏமாற்று மோசடிக்கு பாரத் பாம் மூளையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு சிபிஐ- வசம் ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் இவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.