

தாமாக முன்வந்து வெளியேறும் திட்டத்தை காக்னிசென்ட் நிறுவனம் நேற்று அறிவித்தது. நிறுவனத்தின் மூத்த பணியாளர்களுக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர், மூத்த துணைத்தலை வர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு (டி பிரிவு பணியாளர்) இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரிவில் உள்ள பணியாளர்கள் தாமாக முன்வந்து வெளியேறும் பட்சத்தில் 6 மாதம் முதல் 9 மாதம் வரையில் அவர்களுக்கு சம்பளம் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக பணியாளர்களுக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சலில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
நிறுவனத்தில் 2.60 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் இந்தியாவில் 75 சதவீத பணியாளர்கள் இருக்கின்றனர். சுமார் 1,000 நபர்கள் இந்த திட்டத்துக்கு தகுதியானவராக இருப்பார்கள் என்றும் இவர்களின் ஆண்டு சம்பளம் சராசரியாக ரூ.40 லட்சம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் துறையை நோக்கி நிறுவனம் செல்கிறது. அதற்கான திட்டங்களில் இந்த நடவடிக்கையும் ஒன்று. மூத்த பணியாளர்கள் வெளியேறினாலும், புதிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம் போல இருக்கும் என நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மே 12-ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தங்களது முடிவினை அறிவிக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெவே ஹெச்1பி விசா மூலமான நெருக்கடிகள் இருப்பதால் இந்த நிறுவனத்தின் லாப வரம்பு குறைந்து வருகிறது. அதனால் தற்போது பணியில் இருக்கும் மூத்த பணியாளர்களை வெளியேற்றுவதன் மூலம் புதிய பணியாளர்களை நிர்வாக பொறுப்பில் அமர்த்த முடியும், லாப வரம்பையும் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக இந்த துறையை சேர்ந்த வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் இலக்குகளை எட்டாததால் தலைமைச் செயல் அதிகாரி பிரான்ஸிகோ டிசோசா வின் போனஸ் 20 சதவீதம் குறைக் கப்பட்டது. தவிர முதலீட்டாளர் களும் நிறுவனத்தின் மீது பல விமர்சனங்களை முன்வைத் துள்ளனர். பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும், மாறுதலுக்கு உட்பட்ட ஊதியமும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த மார்ச் மாத இறுதியில் 6,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி 8.6 சதவீதமாக இருந்தது. ஆனால் 10 முதல் 14 சதவீத வளர்ச்சி இருக் கும் என முன்னதாக நிறுவனம் கணித்திருந்தது.