பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக உயர்வு

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக உயர்வு
Updated on
2 min read

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிலை மாறி ஜிடிபி உயர்ந்துள்ளது நிதி அமைச்சக வட்டாரத்தில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வேளாண்துறை, உற்பத்தித் துறை, கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி குறித்த அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு பொருளாதார விவகாரத்துறைச் செயலர் அர்விந்த் மாயாராம் கூறியது: வளர்ச்சியானது மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் எட்ட முடியும் என்று ஏற்கெனவே கூறிவந்தேன். இருப்பினும் இரண்டாம் காலாண்டிலேயே முதல் காலாண்டை விட வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல் காலாண்டை விட வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் என பலரும் கணித்து அதையே தொடர்ந்து கூறிவந்தனர். இப்போது கண்டுள்ள வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது மூன்றாவது மற்றும் நான்காம் காலாண்டில் மேலும் வளர்ச்சியை நாம் எட்ட முடியும். அத்தகைய சூழலில் நமது வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கூடுதலான நிலையை எட்டும் என்றார்.

வேளாண் துறை வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 4.6 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இத்துறை வளர்ச்சி 1.7 சதவீத அளவுக்கு இருந்தது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 3.6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 2.3 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித் துறையைப் பொருத்த மட்டில் ஒரு சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இத்துறை 0.1 சதவீதவளர்ச்சியை மட்டுமே எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடப்பாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வளர்ச்சி 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இத்துறை 0.5 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.

மின்சாரம், எரிவாயு, நீர் விநியோகம் ஆகிய துறைகளில் 7.7 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் இத்துறை 5.7 சதவீத வளர்ச்சியை எட்டியது. கடந்த ஆண்டு இது 4.7 சதவீதமாக இருந்தது. கட்டுமானத்துறை வளர்ச்சி 4.3 சதவீதமாக உயர்ந்தது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் இத்துறை 3.1 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 3.5 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 5.1 சதவீதமாக இருந்தது. வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்புத் துறை 4 சதவீத வளர்ச்சியை எட்டியது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் இத்துறை 6.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. அரையாண்டில் 4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் இத்துறை வளர்ச்சி 6.4 சதவீதமாக இருந்தது. காப்பீடு, நிதி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைத்துறை 10 சதவீத வளர்ச்சியை எட்டியது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இத்துறை 8.3 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது. அரையாண்டில் இத்துறை வளர்ச்சி 9.5 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இது 8.8 சதவீதமாக இருந்தது.

சுரங்கம், குவாரி துறை 0.4 சதவீத வளர்ச்சியை எட்டியது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 1.7 சதவீதமாக இருந்தது. தனிப்பட்ட சேவைத்துறை வளர்ச்சி 4.2 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இத்துறை 8.4 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in