Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

நன்றாக வாழ்வோம் ஒரு நூறு வருஷம்!

ஒரு கிரேக்கக் கதை உண்டு. அரோரா என்கிற அந்தி நேர தேவதை டிதோனஸ் என்ற போர் வீரனைக் காதலிக்கிறாள். ஒரு மனிதனைக் காதலிப்பதால் மரணம் பிரிவை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சி ஜீயஸ் எனும் கடவுளிடம் வேண்டுகிறாள். “தேவனே...நான் ஒரு மனிதப்பிறவியைக் காதலிக்கிறேன். அவனுக்கு சாகாவரம் அளித்து எப்பொழுதும் என்னுடன் இருக்கச் செய்!” ஜீயஸ் சிரித்தவாறு வரமளிக்கிறார்.

காதல் அவசரத்தில் அவள் கேட்க மறந்தது அவன் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்கிற வரத்தையும். அவள் மனதில் டிதோனஸின் இளமை பிம்பம் மட்டும் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அவன் வடிவிழந்து, வலுவிழந்து, உறுப்புகள் செயலற்று, குன்றிப்போக ஆரம்பித்தவுடன் தன் வரமே அவனுக்கு சாபமாய் போனதை உணர்கிறாள்.

இந்த கதை John Robbins எழுதிய Healthy at 100 புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தில் உள்ளது. இன்றைய அமெரிக்காவின் நிலை இது தான் என்கிறார் ஜான் ராப்பின்ஸ்.

மருத்துவம், காப்பீடு, பொருளாதார வசதி, தகவல் தொழில் நுட்பம், கல்வி வளர்ச்சி அனைத்தும் ஆயுளை பெரிதும் கூட்டி வருகிறது. ஆனால் சென்ற நூற்றாண்டில் கடைசி 1% ஆயுட்காலம் நோயில் கழிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் அது கடைசி 20% ஆயுட்காலம் என மாறி, அடுத்த 10 ஆண்டுகளில் அது சுமார் 40% ஆயுட்காலம் நோயில் கழியலாம் என்கிறார் ஜான் ராபின்ஸ். அமெரிக்காவை அடி தொட்டு வணங்கிப் பின்பற்றும் இந்தியாவிற்கு இந்த புத்தகம் தேவை.

நோய்களுக்கான நேரடி மற்றும் மறைமுக செலவுகள் பன் மடங்கு பெருகிவிட்டன. ஒரு புறம் மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் வரும் வருடங்களில் அசுர வளர்ச்சி பெறும். மற்றொரு புறம் எல்லா நிறுவனங்களும் பணியாளர் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் அதிக செலவு செய்யும். இது தான் வணிக பாதிப்பு.

பணியாளர் நலப் பயிற்சி சார்ந்த என் படிப்பில் தான் ஜான் ராப்பின்ஸை கண்டுபிடித்தேன். அவரின் Diet for New America எவ்வளவு தேடியும் அப்போது கிடைக்கவில்லை. 2000ல் அவரின் Food Revolution படித்தேன். பால் பற்றிய என் சுய ஆராய்ச்சி முற்றியிருந்த பருவம். உணவிற்கு பின் உள்ள உளவியலைப் படித்துக் கொண்டிருந்த எனக்கு உணவுக்குப் பின் உள்ள அரசியல், வியாபார பின்னணியை உணர்த்தியது ஃபுட் ரெவல்யூஷன். பால், புரதம், மாமிச உணவு பற்றி அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட மாய பிம்பங்களை உடைத்த ஒரு உணவுப் போராளியாக ஜான் ராப்பின்ஸ் என் நிஜ நாயகர்கள் வரிசையில் சேர்ந்தார்.

கொடி கட்டிப் பறந்த ஐஸ்கிரீம் வியா பாரத்தில் சம்பாதித்தது பல மில்லியன்கள். இழந்தது அப்பா மற்றும் வியாபாரத்தில் ஈடு பட்ட நெருங்கிய உறவினர்களை. பாலின் அதிக கொழுப்பு சத்தால் இருதய நோய்க்கு ஆளானார்கள். குடும்ப வியாபாரத்திலிருந்து ராப்பின்ஸ் விட்டு வெளியேறி தனிமையில் சுய அலசலும் யோகாவும் சைவ உணவுமாய் பல வருடங்கள் திரிந்து, பின் அமெரிக்காவின் இயற்கை உணவு மற்றும் சைவ உணவின் முகமாகவும், இறைச்சி மற்றும் துரித உணவு நிறுவனங்களின் சிம்ம சொப்பனமாகவும் மாறி னார் ஜான் ராப்பின்ஸ். சட்ட ரீதியாகவும் ஆராய்ச்சி ரீதியாகவும் தொடர்ந்து அமெரிக்க மக்களை தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார்.

இந்த நூல் அவரின் வித்தியாசமான முயற்சி. உலகில் 100 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக சொல்லப்படும் மனிதர்களை ஆராய்ச்சி செய்தும், ஆராய்ச்சி குறிப்புகள், நேர்காணல்கள், மருத்துவ வரலாறு, ஆவணப் படம் என திரட்டுகளிலிருந்தும் ஒரு சாமானிய மேற்கத்திய மனிதனுக்கு எழுதப்பட்ட புத்தகம் இது. அவர்களின் உணவு, வாழ்க்கை முறை, சமூக கட்டமைப்பு, வேலை என சகல விஷயங்களையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

அப்காஷியன் எனும் ரஷ்ய பழங்குடிகள், வில்கபம்பா எனும் தென் அமெரிக்கர்கள், தென் ஜப்பானின் ஒகினவா தீவு மக்கள் என விரிகிறது ஆராய்ச்சி.

ஒகினவா தீவில் மட்டும் ஒரு லட்சம் பேர் 100 வயதை கடந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதால் மேற்கத்திய மருத்துவ ஆராய்ச்சி பட்டாளம் வருடக்கணக்கில் டேரா போட்டு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

145 வயது என்றால் சரி என்று ஏற்றுக்கொள் வதில்லை. பல், முடி, தோல், கண்கள், ரத்தம், எலும்பு என பல பரிசோதனைகளுக்கு பின் தான் வயது நிர்ணயிக்கப்படுகிறது. பலர் வயதை சரியாக சொல்வதில்லை என்கிறார்கள். 145 இருக்காது, 120 தான் என்று அறிக்கை படிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

நான் என்ன செய்ய 100 வயது வாழ என்று கேட்டால், ஜான் ராப்பின்ஸ் ஆராய்ச்சி குறிப்புகள் சொல்வது இவைகளைத்தான்:

வயோதிகம் கொண்டாடப்படும் சமூக சூழலில் 100 சுலபமாக சாத்தியமாகிறது. இந்த சமூகங்களில் “வயதானவர்கள்” என்ற சொல்லாடல் இல்லை. “நன்கு வாழ்பவர்கள்” என்கிறார்கள். பெரும்பாலும் செடி கொடி உணவுகள், மிக குறைந்த கொழுப்பு நீக்கிய மாமிசம் தான் உணவு. உப்பு, சர்க்கரை கிடையாது. வறுப்பது என்பது தெரியாது.

நடையும் ஓட்டமும் தான் வாழ்க்கை முறை. ஆடு மேய்க்கும் ஒரு 130 வயது இளைஞரைத் தேடி டாக்டர் லீஃப் ஓடி அலையும் குறிப்புகள் சுவாரசியம். நகைச்சுவை உணர்வு அபாரம். ஒரு ஆளை சோதித்தால் மற்றவர்கள் அருகில் உட்கார்ந்து நக்கலடிக்கிறார்கள். எந்த சோகத்தையும் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். 3 பேரக்குழந்தைகளை போன வருஷம் பேதியில் பறி கொடுத்தேன் எனும் போதும் உடைந்து போகவில்லை.

எல்லாமே மனிதர்கள் சார்ந்தது. தனிமையே கிடையாது. எல்லா நேரத்திலும் கூட்டமாகவே வாழ்கிறார்கள். டிப்ரஷன், டிமன்ஷியா, ஆஸ்டிரேபொரோசிஸ், டயாபடிஸ், இதய நோய்கள் இவை அனைத்தும் பல சமூகங்களில் இல்லவே இல்லை.

நாமும் அப்படித் தானே இருந்தோம் என்கிறீர்களா?

இளமையாகத் தெரிவது தான் நாகரீகம், முதுமை கேவலம் என்பது இன்றைய சமூகச் செய்தி. அது வயோதிகம் தவிர்ப்பும் செயற்கை இளமை முயற்சியையும் மக்களிடம் தூண்டுகிறது. கடை உணவும், பாத்ரூம் செல்ல கூட வாகனம் தேடும் மனமும், சதா தனிமை யில் செல்போனை பார்க்கும் பழக்கமும் மாறி னால், மனித ஆயுள் பற்றி நம் பாரம்பரிய நம்பிக்கையான 120-ஐத் தொடலாம் என்று தோன்றுகிறது.

வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் சார்ந்த பயிற்சி அளித்து இவையெல்லாம் எடுத்துச் சொன்னால் அடுத்த தலைமுறை தப்பிக்கும்.

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x