

ஏற்ற இறக்கமான சூழல் நிலவினாலும், நேற்று ஏற்றத்துடன் இந்திய பங்குச் சந்தைகள் முடிந்தன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை தொட்டது. அதிகபட்சமாக 97 புள்ளிகள் உயர்ந்து 30,007 புள்ளியை தொட்டது. ஆனால் வர்த்தகத்தின் முடிவில் 64 புள்ளிகள் உயர்ந்து 29,974 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. நிப்டியும் அதிகபட்சமாக 9,274 புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 27 புள்ளிகள் உயர்ந்து 9,265 புள்ளியில் நிப்டியின் வர்த்தகம் முடிந்தது.
மிட்கேப் குறியீடு 0.77 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.12 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. பிஎஸ்இ-யில் 1,977 பங்குகள் உயர்ந்தும், 957 பங்குகள் சரிந்தும், 137 பங்குகளில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் முடிந்தன.
அதானி போர்ட்ஸ், மாருதி சுசூகி மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் இரண்டு குறியீட்டிலும் உயர்ந்து முடிந்தன. மாறாக ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தன.
சங்கரா பில்டிங் 37% உயர்வு
சங்கரா பில்டிங் நிறுவனத்தின் பங்கு முதல் நாள் வர்த்தகத்தில் 37 சதவீதம் உயர்ந்து 632 ரூபாயில் முடிவடைந்தது. 460 ரூபாயில் இந்த பங்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் 555 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது.
350 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம் நிதி திரட்டியது. கடந்த மார்ச் 22 முதல் 24-ம் தேதி வரை முதலீட்டு காலம் ஆகும். நிர்ணயம் செய்யப்பட்டதை விட 41 மடங்குக்கு பரிந்துரைகள் வந்தன.
இன்று நிதிக்கொள்கை
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்து வரும் சூழலில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்த முடிவுகளை இன்று அறிவிக்க இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். பெரும்பாலான வல்லுநர்கள் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் பண மதிப்பு நீக்கம் காரணமாக வங்கிகளில் அதிக தொகை குவிந்திருக்கிறது. இந்த தொகையை பயன்படுத்து வதற்கான திட்டங்களை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.