

நிதிப்பற்றாக்குறையை 4.8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அந்த எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனமான பார்கிளேஸ் தெரிவித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் திட்டமிட்ட செலவுகளில் 94 சதவீதத்தை ஏற்கெனவே அடைந்துவிட்டது. இருந்தாலும் கூட திட்டமிட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கான 4.8 சதவீதத்தை செலவுகளைக் குறைப்பதன் மூலம் அடைய முடியும் என்று பார்கிளேஸ் தெரிவித்திருக்கிறது.
வரும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான செலவுகள் 5.3 முதல் 5.6 லட்சம் கோடி வரையில் இருக்க வேண்டும்.
இருந்தாலும், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் அரசாங்கத்தால் செலவுகளைக் குறைப்பது கடினம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மூலதன விரிவாக்க செலவுகள், பாதுகாப்பு செலவுகள், வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் செய்யும் முதலீடுகள் ஆகியவற்றை குறைப்பதன் மூலம் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என்று ஆலோசனை கூறி இருக்கிறது. மேலும், மானியங்களுக்கு கொடுக்கும் தொகையை தள்ளிப்போடுவது, மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு கொடுக்கும் தொகையை குறைப்பது, பொருளாதார சமூக நல திட்டங்களுக்குச் செய்யும் செலவுகளை குறைப்பது அல்லது நிறுத்துவது போன்ற செயல்கள் மூலம் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் என்று பார்கிளேஸ் தெரிவித்திருக்கிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும் - அர்விந்த் மாயாராம்:
அதிகரித்து வரும் ஏற்றுமதி, குறைந்து வரும் தங்க இறக்குமதி போன்ற காரணங்களால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 50 பில்லியன் டாலர்களாக நடப்பு நிதி ஆண்டிலே குறையும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலா ளர் அர்விந்த் மாயாராம் தெரிவித் திருக்கிறார். 2012-13-ம் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 88.2 பில்லியன் டாலர் அல்லது ஜிடிபியில் 4.8 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 50 பில்லியன் டாலர்களுக்குள் குறையும் என்று செய்தியாளர்களிடம் மாயாராம் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரை ஆண்டில் 3.1 சதவீதமாகதான் இருந்தது. ஆனால் இதே காலத்தில் முந்தைய நிதி ஆண்டின் (2012 ஏப்ரல் முதல் செப் வரை) முதல் பாதில் ஜிடிபியில் 4.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த மே மாதம் 162 டன்னாக இருந்த தங்க இறக்குமதி நவம்பர் மாதம் 19.3 டன்னாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.