

ஆன்லைன் மூலம் வேலை தேடும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது வேலைதேடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு தேடலில் கல்வி மற்றும் வங்கித் துறை முன்னிலையில் உள்ளன என்று மான்ஸ்டர் இந்தியா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மான்ஸ்டர் இந்தியா வேலைவாய்ப்பு குறியீடு அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தில் 244 வேலைவாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 208 வேலை வாய்ப்பு கோரி பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்யும் துறைகளாக தகவல் தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறைகள் முன்னிலையில் இருக்கும். ஆனால் தற்போது வங்கி மற்றும் நிதித்துறை, கல்வி மேலாண்மை போன்ற துறைகளை விரும்பப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
வங்கித்துறையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக குறிப்பிடத்தக்க வகையில் திறன் மிகுந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனிடையே காப்பீட்டுத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்று மான்ஸ்டர் டாட் காம் நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் மோடி குறிப்பிட்டார்.