

பரஸ்பர நிதிகளை நிர்வகிக்கும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒரே நாளில் 51 கிளைகளைத் திறந்து சாதனை படைத்துள்ளது. 23 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இக்கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கியமான 15 சிறிய நகரங்களும் இதில் அடங்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைத் திறந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகங்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இதன் செயல்பாடு இப்போது 27 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களுக்கு விரிந்துள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர்களில் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு கிளைகள் தொடங்கப் பட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை மிக எளிதாக மேற்கொள்ள முடியும்.
செபி தலைவர் யு.கே. சின்ஹா, பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் காரா ஆகியோர் முன்னிலையில் கிளைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதன் மூலம் இரண்டாம் நிலை நகர்களில் அதிகபட்சமாக 139 கிளைகளைக் கொண்ட நிறுவனமாக எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திகழ்கிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர்களில் வசிக்கும் முதலீட்டாளர்களது சேமிப்பை பெற்று அதற்கு அதிக ஆதாயம் திரட்டித் தருவதுதான் நோக்கம். அதற்காக கிளைகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்டுள்ளாக தினேஷ் காரா தெரிவித்தார்.