

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கையகப்படுத்துவது, நிறுவனங்களை தாய் நிறுவனத்துடன் இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறி நவம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று மத்திய தொலைத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
டெல்லியில் அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற சிபல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் துணை நிறுவனங்களை ஒருங்கிணைப்பது மற்றும் கையகப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகள் நவம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்றார்.
கடந்த மாதம் இதுபற்றி கேட்டபோது அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறைகளின்படி நிறுவனங்களை இணைப்பது, கையகப்படுத்தும்போது அந்நிறுவனங்கள் ஏற்கெனவே பயன்படுத்திவந்த லைசென்ஸுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த லைசென்ஸுக்கு மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். மேலும் நிறுவனங்கள் புதிதாக கையகப்படுத்தியிருந்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓராண்டு கால அவகாசம் அளிக்க புதிய விதிமுறையில் வழிவகை உள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பது மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கையை முடிக்காமலிருப்பதை இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்துள்ளது.
இதனிடையே கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த லைசென்ஸ் கொள்கையின்படி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களில் எவ்வித பங்குகளையும் வைத்திருக்கக் கூடாது என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
தொலைத் தொடர்பு சேவையில் சந்தையில் 35 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தைப் பிடித்துள்ள நிறுவனங்கள் தாய் நிறுவனத்துடன் இணைப்பதற்கு உடனடி அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
தொலைத் தொடர்பு சேவையில் 35 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சந்தையைப் பிடித்துள்ள நிறுவனங்களை இணைப்பதற்கு அனுமதிக்கலாமா என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அனுமதியை தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) எதிர்நோக்கியுள்ளது.
தாய் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அலைக்கற்றை அளவு 25 சதவீதத்துக்கு மீறாமலிருக்க வேண்டும் என்பதை புதிய கொள்கை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.