Published : 23 Oct 2014 11:03 AM
Last Updated : 23 Oct 2014 12:38 PM
கனடா நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல்தான் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்துக்கு பாதுகாப்புப் படையினர் சீருடை அணிந்து வந்த நபர் ஒருவர் புதன்கிழமை சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
நாடாளுமன்ற மைய கட்டிடம், போர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி அந்த நபர் நடத்திய தாக்குதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இருந்த கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்புடன் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்த்தாக்குதலில், அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் 'பயங்கரவாதம்'தான், கனடாவை பயங்கரவாதத்தால் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என்றார்.
இதனிடையே, இந்தத் தாக்குதலை நடத்தியவர் மைக்கேல் ஸெஹாஃப் (32) என்பது தெரியவந்துளது. அவர் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.