Last Updated : 06 Jun, 2016 06:30 PM

 

Published : 06 Jun 2016 06:30 PM
Last Updated : 06 Jun 2016 06:30 PM

எஸ்பிஐ இணைப்புக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி: அருண் ஜேட்லி தகவல்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது தொடர்பான பரிந்துரைக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

எஸ்பிஐ மற்றும் அதன் 5 சிறிய வங்கிகளோடு பாரதிய மகிளா வங்கியையும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அதற்கு அரசு அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று ஜேட்லி கூறினார்.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து வங்கிகளின் தலைவர்களோடு நிதி அமைச்சர் ஜேட்லி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியது: இப்போதைக்கு எஸ்பிஐ பரிந்துரை மட்டுமே அரசு எதிர்நோக்கியுள்ளது. வங்கிகளை இணைப்பது தொடர்பான பாரத ஸ்டேட் வங்கியின் பரிந்துரைக்கு அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது. பொதுவாக வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதைத்தான் பட்ஜெட் உரையின்போதும் வலியுறுத்தியிருந்தேன் என்று ஜேட்லி கூறினார்.

அரசின் ஒப்புதல் எவ்வளவு விரைவில் வெளியாகும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எஸ்பிஐ வங்கி இணைப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக ஜேட்லி பதிலளித்தார்.

கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பது தொடர்பான பரிந்துரைக்கு எஸ்பிஐ ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவையாகும்.

வங்கிகள் இணைக்கப்பட்டால் ரூ.37 லட்சம் கோடி பரிவர்த்தனையோடு 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய வங்கியாக எஸ்பிஐ உருவாகும்.

2008-ம் ஆண்டு பாங்க் ஆப் சௌராஷ்டிராவை தன்னுடன் இணைத்துக் கொண்டது எஸ்பிஐ. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் இணைக்கப்பட்டது.

வங்கி இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ எடுத்து வந்தாலும் போதிய மூலதனம் இல்லாததால் அவற்றை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தது ரூ.2 ஆயிரம் கோடி மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் வங்கி ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாகவும் இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ-யால் கடந்த காலங்களில் மேற்கொள்ள முடியவில்லை.

எஸ்பிஐ வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டால் அது நிர்வகிக்கும் தொகை ரூ.37 லட்சம் கோடியாக இருக்கும். வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 22,500 ஆக உயரும். ஏடிஎம்களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயரும்.

எஸ்பிஐ-க்கு மட்டும் நாடு முழுவதும் 16,500 கிளைகள் உள்ளன. இதில் 191 கிளைகள் 36 நாடுகளில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x