Published : 06 Mar 2014 11:47 AM
Last Updated : 06 Mar 2014 11:47 AM

ஏற்றுமதி இலக்கை எட்டுவது கடினம்: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையம்

நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கான 32,500 கோடி டாலரை எட்டுவது சிரமம் என்று இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (எப்ஐஇஓ) கருத்து தெரிவித்துள்ளது. உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, சர்வதேச அளவிலான தேக்க நிலை நீடிப்பது ஆகியன நமது ஏற்றுமதி வாய்ப்பை பெருமளவு பாதித்துள்ளதாக எப்ஐஇஓ தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு முடிவடைய இன் னும் 25 நாள்களே உள்ள நிலையில் இலக்கை எட்டுவது சாத்தியமில்லாதது என்று மையத்தின் தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார். நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிதி ஆண்டில் 31,500 டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையான காலத்தில் ஏற்றுமதி 5.71 சதவீதம் அதிகரித்து 25,700 கோடி டாலரை எட்டியது. அதேபோல இறக்குமதி 7.81 சதவீதம் சரிந்து 37,700 கோடி டாலராக இருந்தது. இதனால் ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறை 11,900 கோடி டாலராக இருந்தது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7,000 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும். ஆனால் அது சாத்தியமில்லை.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 6.3 சதவீதம் அதிகரித்து 32,600 கோடி டாலரை எட்டும் என அறிவித்திருந்தார். கடந்த நிதி ஆண்டில் (20012-13) இந்தியாவின் ஏற்றுமதி 1.8 சதவீதம் அதிகரித்து 30,040 கோடி டாலராக இருந்தது.

ஏற்றுமதியாளர்களுக்கு கடன் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சேவை வரி, சுங்க வரியை திரும்ப அளிப்பது, தள்ளுபடி கோரிக்கை மற்றும் மதிப்பு கூட்டல் வரி ஆகியன காலதாமதமாவதும் ஏற்றுமதியை பாதிக்கும் விஷயங்களாகும். எனவே ஏற்றுமதிக்கான இலக்கை ஆண்டுதோறும் அரசு நிர்ணயிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கான ஏற்றுமதி இலக்கை வரையறுத்து அதை எட்டுவதற்கான நடவடிக்கைகளை எப்ஐஇஓ மேற்கொண்டு வருவதாக அகமது குறிப்பிட்டார். 2014-19-ம் ஆண்டுகளுக்கான ஏற்றுமதி இலக்கு குறித்த அறிக்கையை எப்ஐஇஓ தயாரித்து வருவதாக அவர் கூறினார். இன்னும் இரண்டரை மாதத்தில் இந்த அறிக்கையும், பரிந்துரையும் அரசிடம் சமர்க்கப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்த அறிக்கை நிச்சயம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான சாலை மற்றும் துறைமுக வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். போதுமான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் ஏற்றுமதியை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பரிவர்த்தனைக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. வங்கிகள் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தை ஏற்றுமதியாளர்களுக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x