

பொருளாதார தேக்க நிலை காரணமாக நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த செய்யும் விளம்பர செலவை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ளன. பொதுவாக தீபாவளி பண்டிகையின்போதுதான் ஜவுளி நிறுவனங்கள் மட்டுமின்றி நுகர்பொருள் மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் விளம்பரம் செய்து மக்களை ஈர்க்கும். ஆனால் இந்த ஆண்டு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வெகுவாக சரிந்ததால் அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான விளம்பர செலவு வெகுவாகக் குறைந்து்ள்ளதாக அசோசேம் செயலர் டி.எஸ். ராவத் தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விளம்பரச் செலவை 65 சதவீதம் வரைக் குறைத்துள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொருளாதார தேக்க நிலை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் பொருள்கள், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, மின்னணு சாதனங்கள், ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தேக்க நிலை காரணமாக இந்நிறுவனங்களின் லாப அளவு குறைந்துள்ளதோடு, விற்பனையும் வெகுவாகக் குறைந்துள்ளதாக ராவத் மேலும் கூறினார்.
வங்கித் துறை, காப்பீடு ஆகியன அதிக அளவில் விளம்பரம் செய்வதுண்டு. இத்துறை நிறுவனங்களும் தங்களது விளம்பரச் செலவைக் கணிசமாகக் குறைத்துவிட்டன.
விளம்பரம் செய்வதற்குப் பதிலாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பது, நன்கொடை கூப்பன்களை பரிசாக அளித்து விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு ஊடகங்களும் விளம்பரம் அளிக்கும் நிறுவனங்களும் மிகப் பெருமளவிலான சலுகை அளிக்க முன்வந்துள்ளன.
இதன் மூலம் தங்களது வருவாயை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஊடகத் துறையினர் இறங்கியுள்ளனர்.
புது டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், புணே, கொல்கத்தா, ஆமதாபாத், சண்டீகர் ஆகிய பகுதிகளில் உள்ள 1,200 நிறுவனங்களிடையே ஆய்வு நடத்தப்பட்டதில் விளம்பர செலவு குறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.