Last Updated : 13 Aug, 2016 10:58 AM

 

Published : 13 Aug 2016 10:58 AM
Last Updated : 13 Aug 2016 10:58 AM

டெல்லியில் டீசல் கார்கள் விற்பனை மீதான தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தலைநகர் டெல்லியில் 2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்கள் விற்பனை மீதிருந்த தடையை உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது. புதிதாக விற்பனை செய்யப்படும் கார்கள் அதன் விற்பனை விலையில் ஒரு சதவீதத்தை சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரியாக செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நிலவும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் 2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதித்தது.

மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தடையை விலக்க வேண்டும் என்று பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

சூழல் பாதுகாப்பு வரியாக ஒரு சதவீதத்தை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கத் தயாராக இருப்பதாக இது தொடர்பாக முந்தைய விசாரணையின்போது அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி கள் ஏ.கே. சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஒரு சதவீத வரியை வசூலிப்பதற்கு தனி கணக்கைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். ஒரு கார் விற்பனையானவுடன் அதற்கு ஒரு சதவீத சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரி செலுத்தப்பட்டதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினர்.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி அளித்த தீர்ப்பில் ஒரு சதவீத சூழல் காப்பு வரியை வசூலிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்த யோசனைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இவ்விதம் வரி விதிப்பது என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

2,000 சிசி திறனுக்குக் குறைவான டீசல் கார்கள் பற்றிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டுமா என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவுக்கு விட்டு விடுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஒரு சதவீத வரியை மேலும் அதிகரித்துக் கொள்ளலாமா என கேட்கப்பட்டதற்கு, அவ்விதம் விதிக்கப்பட்டாலும், அதை முன் தேதியிட்டு வசூலிக்கக் கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்ட னர்.

முதலில் ஒரு சதவீத வரியை வசூலிப்போம். இப்போதைய சூழலில் அதிக வரி விதிப்பது சரியாக இருக்காது என்று தலைமை நீதிபதி தாக்குர் குறிப்பிட்டார்.

ஆட்டோமொபைல் நிறுவனங் கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x