

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் நுழைவதற்கு பிரிட்டனின் டெஸ்கோ அளித்துள்ள மனு மற்றும் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கி அளித்துள்ள மனுவையும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) திங்கள்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.
சிங்டெல் நிறுவனம் இந்திய நிறுவனத்தில் தனக்குள்ள பங்கு அளவை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொள்வதற்கும் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் கூடுதலாக ரூ. 2.98 கோடி அன்னியச் செலாவணி இந்தியாவுக்குள் வரும்.
பிரிட்டனின் டெஸ்கோ பிஎல்சி நிறுவனம் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் 11 கோடி டாலர் முதலீட்டுடன் நுழைய உள்ளது. இதற்காக டாடா நிறுவனத்தின் டிரென்ட் ஹைபர் மார்க்கெட் லிமிடெட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. கடந்த செப்டம்பரில் அன்னிய நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் நுழைய 51 சதவீதம் வரை அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவுப்புக்குப் பிறகு முதலில் இந்தியாவுக்குள் நுழைய விண்ணப்பித்துள்ள நிறுவனம் டெஸ்கோவாகும்.
ஹெச்டிஎப்சி வங்கி அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரித்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளது. டிசம்பர் 13-ம் தேதி வரை அன்னிய முதலீட்டு அளவு 52.18 சதவீதமாக உள்ளது. கடந்த செப்டம்பரில் ஆக்ஸிஸ் வங்கிக்கு வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக உயர்த்திக் கொள்ள எப்ஐபிபி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல மொரீஷியஸின் துணை நிறுவனமான சிஜிபி இன்வெஸ்ட் மென்ட் லிமிடெட் நிறுவனம் வோடபோன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் குறைந்த பட்ச முதலீடுகளை வாங்க அனுமதி கோரியுள்ளது.
மொத்தம் 12 முதலீட்டு மனுக்களை குழு திங்கள்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. அன்னிய நேரடி முதலீடுகளை (எப்டிஐ) அரசு நேரடியாக அனுமதிக்கிறது. சில முக்கியமான அதாவது பொருளாதாரத்தை பாதிக்கும் துறைகளுக்கான அனுமதி மட்டும் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.