

இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹருன் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களான பஜாஜ் ஆட்டோ நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ், மாரிகோ தலைவர் ஹரிஷ் மரிவாலா, பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அஜய் பிரமல் ஆகியோரை விட இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ஆச்சார்யா பால் கிருஷ்ணா.
இவரின் சொத்து மதிப்பு ரூ.25,600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இவர் 26-ம் இடத்தில் இருக்கிறார்.
2007-ம் ஆண்டு சிறிய மருந்தகமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது முன்னணி எப்எம்சிஜி நிறுவனமாக பதஞ்சலி இருக்கிறது. கடந்த வருடம் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.5,000 கோடியை தொட்டது. எப்எம்சிஜி பிரிவில் இருக்கும் இமாமி, டாபர் மற்றும் மாரிகோ ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை இவரது நிறுவனம் தாண்டிவிட்டது. நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடி ஆகும். அவரைத் தொடர்ந்து சன் பார்மாவின் திலிப் சாங்வி, பலோன்ஜி மிஸ்திரி ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.