Published : 06 Nov 2013 12:16 pm

Updated : 06 Jun 2017 14:06 pm

 

Published : 06 Nov 2013 12:16 PM
Last Updated : 06 Jun 2017 02:06 PM

நாலும் தெரிந்தவர் யார் யார்?

காட்டில் ஒரு கிழட்டுச் சிங்கம் இருந்ததாம். தள்ளாத வயதிலும் தான் இந்த காட்டிற்கு ராஜா என்ற கர்வம் மாறாது எல்லா மிருகங்களிடமும் “பந்தா” காட்டி வருமாம். போக வரும் மிருகங்களை எல்லாம் நிறுத்தி, “யார் இந்த காட்டுக்கு ராஜா தெரியுமா?” என்று வினா விடை நடத்தும். “நீங்கள் தான் பிரபுவே!” என்றால் பெருமிதத்துடன் நகர்ந்து செல்லும்.

அப்படித்தான் ஒரு நாள் எதிரே வந்த யானையைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டது. யானையோ சற்று மதம் பிடித்திருந்த நிலையில் சிங்கத்தின் இந்தக் கேள்வியை ரசிக்கவில்லை. சோனியாய் இருந்த சிங்கத்தை ஏளனமாய்ப் பார்த்து விட்டு, அதன் வாலை இழுத்து கிறு கிறுவென்று தலைக்கு மேல் சுற்றி எறிந்து விட்டு சென்றது.


நிலை குலைந்த சிங்கம் சுதாரித்துவிட்டு எழுந்து புலம்பியதாம்: “விடை தெரியலைன்னா கேட்கலாமே? எதுக்கு இவ்வளவு கோபம்?”

இது போல பல சிங்கங்களை தினமும் பார்க்கிறோம். சில சிங்கங்களுடன் வேலை பார்க்கின்றோம். தான் அறிவில் ஒசத்தி, தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், தன் தயவில் தான் உலகம் இயங்குகிறது என்கிற மனப்பிறழ்வுடன் இன்று பலர் நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். என்ன பிரச்சினை இவர்களுக்கு?

சென்ற வாரம் எழுதியதைப் படித்தவிட்டு என் நண்பர் ஒருவர் கேட்டார்: “ஏன் சார் இங்கிலீஷ்ல எழுதுவீங்களே? என்னாச்சு?” இன்னொருவர், “நிறைய மேற்கோள் காட்டி எழுதுங்க!” என்றார். இன்னொருவர் கட்டுரை அளவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். படித்து விட்டு மனைவியிடம் கஷாயம் கிடைக்குமா என்று விசாரித்தேன். அனுப்பியவர் மாலை கூப்பிட்டுக் கேட்டார்: “எப்படி என் analysis?”

இன்னொருவர் துக்க வீட்டில் யதேச்சையாக சந்தித்த போது, நான் எழுதுவது அனைத்தும் பைபிளில் உள்ளது என்றார். எத்தனை படித்தீர்கள் என்று கேட்ட போது போன மாசம் ஏதோ ஒண்ணு என்றார்.

தமிழில் எழுதுவதின் தொழில் உபாதைகள் முழுவதும் எனக்கு இப்பொழுது புரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் நாஞ்சில் நாடனுடன் பாண்டிச்சேரியில் பக்கத்து வீட்டுக்கார புத்திசாலியின் டார்ச்சர் தாங்காமல் எரிமலையாய் வெடித்த சம்பவத்தை இப்பொழுது முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

யாராவது ஒருவருக்கு அறிவுரையோ கருத்தோ சொல்ல அவசரப்பட்டுக் கொண்டே இருக்கும் கருத்து கந்தசாமிகள் பெருகி வருகிறார்கள். இதற்கு ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் வளமான விளை நிலங்கள். யார் படத்தையோ கருத்தையோ ஷேர் செய்து லைக் வாங்குவதே இன்று அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த விஷயம்.

எனது ஒவ்வாமை பிரச்சினைகளில் ஒன்று தினசரி பொன்மொழி எஸ்.எம்.எஸ் கள். டேல் கார்னகியும் நெப்போலியன் ஹில் கூட இவ்வளவு எழுதியிருக்க மாட்டார்கள். தோசையை தின்று கிளம்புவதற்குள் இந்த காலை நேர கருத்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸை அழைக்கும் வரை யோசித்தேன்.

இது தமிழர்களின் syndrome ஆ என்பதை அதிகம் உலகம் சுற்றிய தமிழர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஒரு முறை நான் வேலை பார்த்த கொரியன் கார் கம்பெனியில் எஞ்சின் பிரிவுத் தலைவரிடம் வண்டியின் வடிவத்தை பற்றி ஒரு ஆதார சந்தேகத்தைக் கேட்டேன். 30 வருடங்கள் அங்கு வேலை பார்த்தவர் சொன்னார்: “எனக்குத் தெரியாது. பாடி ஷாப் தலைவரிடம் கேளுங்கள். அவர் தான் முழுமையான பதில் தருவார்!” என் கேள்விக்கு பதில் சொல்லும் அளவிற்கு அறிவிருந்தாலும் தன் அறியாமையையும் உணர்ந்து ஒரு நியாயமான பதிலைத் தந்தது என்னை யோசிக்க வைத்தது. நம் ஊரில் வழி கேட்டால் கூட தெரியாது என்று சொல்லும் பழக்கம் கிடையாது. படித்தவர் படிக்காதவர் பேதமின்றி தமிழர் அனைவருக்கும் இது பொது குணம்.

அதே போல 50 விசிட்டிங் கார்ட் அச்சடித்தால் ஆலோசகர் ஆகிவிடலாம். எல்லா தொழிலும் செய்பவரை விட அறிவுரை சொல்வோர் அதிகமாகி விட்டனர். வடிவேலு ஒரு படத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க டிக்கெட் வசூலித்து கூட்டம் போடுவார். கடைசியில் நீங்களும் இதையே செய்து கோடீஸ்வரர் ஆகுங்கள் என்பார். (கொசுறு: வடிவேலுவின் கொசு அடிக்கும் மிஷின் காமெடியை ஐ.ஐ.எம். ல் மார்க்கெடிங் பேராசிரியர்களுக்கு சிபாரிசு செய்துள்ளேன்!)

எல்லாம் தனக்குத் தெரியும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் இரு வகை: ஒரு தரப்பினர் அறியாதவர்கள். மற்றொரு தரப்பினர் ஏமாற்றுக்காரர்கள்.

சிறிது அறிந்து கொண்டு முழுவதும் அறிந்தது போல நினைத்துக் கொள்வோர் நிஜமான தேடலில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள். கிணற்று தவளைகள். மற்றவர்களையும் கிணற்று தவளைகளாய் நினைத்து இவர்கள் செய்யும் அளப்பரை தான் கொடுமையான நகைச்சுவை. இவர்கள் அதிகார மையத்தில் உள்ளபோது இவர்களுக்கு நிஜ அறிவை கண்டு கொள்ளும் அறிவோ கொண்டாடும் அறிவோ கிடையாது. படிப்பையும் பதவியையும் அறிவின் குறியீடுகளாய் பார்க்கும் அசட்டுத்தனங்கள் இங்கு தான் துவங்குகிறது.

இன்னொரு பிரிவு தன் அறிவும் அறியாமையையும் முழுதும் உணர்ந்தாலும் தன் அறிவை வைத்து மற்றவர்களை ஏமாற்றி ஏய்த்து பிழைக்கும் வித்தை அறிந்தவர்கள். கார்ப்பரேட் சாமியார்கள், ஊடக நட்சத்திரங்கள் என்று பல போலி அறிவு ஜீவிகளைச் சொல்லலாம். இவர்கள் பின்னணியில் ஒரு வியாபாரம் கண்டிப்பாக இருக்கும்.

ஒரு பயணத்தில் சக பயணி அற்புதமாகச் சொன்னார்: “கடவுளையே கண்டு விட்டால் அப்புறம் யாருடன் பேசப் பிடிக்கும்? யாரிடம் போய் தான் கடவுள் எனச் சொல்லத் தோன்றும்?”

ஆக, (போலி) அறிவின் வன்முறை இன்று எல்லா தளத்திலும் வளர்ந்து வரும் சூழலில் அதிலிருந்து மீள தானும் ஒரு அறிவு ஜீவி போல நடிப்பதே சிறந்த வழி என்றாகி விட்டது. அதனால் தான் முதலில் சொன்ன கருத்து கந்தசாமிகளின் அட்டகாசங்கள்!

அறிவு ஒன்றல்ல எட்டு வகை என்கிறார் ஹோவார்ட் கார்ட்னர். மூளையின் செயல் பாடுகளை வைத்து வகைப் படுத்துகிறார். எண்பதுகளில் அவர் உருவாக்கிய Theory of Multiple Intelligences இன்று மெல்ல மெல்லப் பேசப்பட்டு வருகிறது. நம் கல்வி முறை வெறும் மூன்று அறிவுகளைத்தான் கையாள்கிறது. அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை விட எந்த அறிவு என்று பகுப்பாய்தல் நலம். கார்ட்னர் கூற்றை பிறகொரு முறை விரிவாகப் பார்க்கலாம்.

கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் அடிப்படை ஐ.க்யூ சார்ந்த உளவியல் சோதனைகளைத் தாண்டி ஒட்டு மொத்த ஆய்வுகள் செய்வது அவசியம். அறியாததை பரிட்சித்து பார்ப்பதிலும், அறிந்ததை அகந்தையில்லாமல் பகிர்வதும் தான் உண்மையான கல்வி.

ஒரு ஓஷோ கதையுண்டு. எல்லா நேரத்திலும் ஆனந்தமாயிருக்கும், என்றும் கடவுளை தொழாதவனாகவும் உள்ள அந்த பக்தனுக்கு தரிசனம் தந்தார் கடவுள். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டதற்கு, “ஒன்றும் வேண்டாம். எல்லாம் கிடைத்து ஆனந்தமாய் இருக்கிறேன்.” என்றான். “சரி, பிறருக்கு உதவும் வகையில் சில மந்திர சக்திகள் தருகிறேன் உனக்கு!” என்றாராம்.

“ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனை.”

“என்ன?”

“என்னால் நடக்கும் அற்புதங்கள் எனக்கே தெரிய வேண்டாம். என் மூலமாக நடக்கிறது என்றும் தெரிய வேண்டாம். அதனால் வரும் அகந்தை என் ஆனந்தத்தை அழித்து விடும். என் மூலம் எல்லா அற்புதங்களை எனக்கு தெரியாமல் நீயே நடத்து!”

இது தான் ஞானமோ?

டாக்டர் ஆர். கார்த்திகேயன், தொடர்புக்கு - Gemba.karthikeyan@gmail.comகருத்துஅநிவுரைஊடகங்கள்ஃபேஸ்புக்உளவியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x