Last Updated : 18 Feb, 2017 10:08 AM

 

Published : 18 Feb 2017 10:08 AM
Last Updated : 18 Feb 2017 10:08 AM

கொரியாவை உலுக்கிய ஊழல் வழக்கு: சாம்சங் நிறுவன தலைவர் கைது

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவைச் சேர்ந்த சாம்சங் குழுமத்தின் தலைவர் ஜே ஒய் லீ நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு அதிபருக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரபலமாகத் திகழும் சாம்சங் குழும சொத்துக்கு வாரிசுகளில் ஒருவர் கை செய்யப்பட்டிருப்பது அந்நிறுவனத்துக்கு மிகப் பெரும் பின்னடைவாகும். 48 வயதாகும் ஜே ஒய் லீ இக்குழுமத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவராவார். தந்தை லீ குன் ஹீ-க்கு வயதானதைத் தொடர்ந்து குழும நிறுவனங்களுக்கு இவர் தலைமை ஏற்றார்.கொரியாவின் மிகுந்த வசதிபடைத்த குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்றாகும்.

கொரியாவின் 11-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பார்க் குய்ன் ஹை. கொரியாவின் முதல் பெண் அதிபராக 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இவர் மீது ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு இவரது பதவி முடக்கப்பட்டுள்ளது. கொரியாவின் கன்சர்வேடிவ் கிராண்ட் தேசிய கட்சியைச் (ஜிஎன்பி) சேர்ந்தவர். மிகப் பெரிய தொழில் குழுமத்துக்கு சாதகமாக இவர் செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அதிபர் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இவருக்குப் பதிலாக கொரியாவின் பிரமதர் ஹவாங் கியோ ஆன் தற்போது பொறுப்பு அதிபராக செயல்படுகிறார்.

இவரது நெருங்கிய நண்பருக்கு 4 கோடி டாலர் லஞ்சப் பணம் அளித்ததாக ஜே மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவரது நிறுவனத்துக்கு சாதகமாக அரசு விதிகளை வகுப்பதற்காக இந்த கையூட்டு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இருந்ததால் ஜே கைது செய்யப்பட்டதாக போலீஸார் நீதிமன்றத்தில் தெரி வித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையின்போது இதில் உள்ள உண்மை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாக சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஜே மீதான வழக்கு விசாரணை அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

லீ-யின் தந்தை மற்றும் இவரது தாத்தா ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அவர்கள் எவரும் சிறை சென்றதில்லை.

தனிச் சிறையில் அடைப்பு

ஜே ஒய் லீ, 71 சதுர அடி அளவுள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது மிகச் சிறிய அளவிலான தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்டில் அளிக்கப்படவில்லை. தரையில் போடப்பட்ட மெத்தை மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. சியோலுக்கு வெளியே அமைந்துள்ள சிறைச் சாலையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இவரைப் பார்க்க எவருக்கும் அனுமதி கிடையாது. குளிப்பதற்கு ஷவர் கிடையாது. கை கழுவ ஒரே ஒரு வாஷ் பேசின் மட்டும் உள்ளது. கழிவறை அறையின் மூலையில் உள்ளது.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2 குழந்தை களுடன் வசிக்கும் லீ, 620 கோடி டாலர் சொத்துக்கு அதிபதி. 40 லட்சம் டாலர் மதிப்புள்ள சியோல் மான்சன் இவரது வீடு. இவர் அடைக்கப்பட்டுள்ள தனியறையில் இவரைப் பார்க்க வருவோர் கண்ணாடி தடுப்புக்கு அடுத்த பகுதியில் சுமார் 30 நிமிஷம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவர்.

சிறையில் அடைக்கப்படும் முன் இவரது அங்க அடையாளங்கள் குறிக்கப்பட்டு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. பின்னர் குளித்துவிட்டு வரும்படி உத்தரவிடப்பட்டது. குளித்துவிட்டு வந்த அவருக்கு கைதிகளுக்கான சீருடை அளிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு தினசரி 1.26 டாலர் மதிப்புள்ள அரிசி சாதம் மற்றும் காய்கறிகள் அளிக்கப்படும். கூடுதலாக தேவையெனில் இவர் அங்குள்ள காண்டீனில் வாங்கிக்கொள்ள வேண்டும். மதிய உணவு பிளாஸ்டிக் தட்டில் அளிக்கப்படும். இவரது அறையில் ஒரு டிவி இருக்கும். அதில் சட்ட அமைச்சகம் பதிவு செய்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும். இதைத் தவிர வேறெந்த சேனல் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகாது.

கொரிய அதிபரின் நெருங்கி சகா சோய் சூன் சில் என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கலாசாரத்துறை முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி ஆகியோரும் இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தனி அறையில் ஒரு பக்கம் சிறிய டேபிளில் படிப்பதற்கான வசதி உள்ளது.

இந்த சிறை வளாகத்தில் உள்ளவர்கள் தங்களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ், காபி, நூடுல்ஸ், சலவை சோப், ரேசர், துண்டு போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

தென் கொரியாவில் குற்றச் சாட்டு தொடர்பாக கைதானவருக்கே இவ்வளவு கெடுபிடிகள் உள்ளன. ஆனால் நீதிமன்றம் தண்டனை வழங்கிய குற்றவாளிக்கு இங்கு பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x