

நேற்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதேபோல அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. நுகர்வோர் செய்யும் செலவுகள் காரணமாக வளர்ச்சி உயரும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் ஏலன் தெரிவித்தார். ஜூலை மாதத்தில்தான் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று சூசகமாக அவர் தெரிவித்ததால் பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. 232 புள்ளிகள் உயர்ந்து 27000 புள்ளிளை கடந்தது. வர்த்தகத்தின் முடிவில் 27009 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. நிப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 8266 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன.
எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பத் துறை குறியீடுகளை தவிர்த்து மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. ரியால்டி குறியீடு 1.7 சதவீதம் உயர்ந்தது. வங்கிக் குறியீடு 1.63 சதவீதமும், கன்ஸ்யூமர் டியூரபிள் குறியீடு 1.57 சதவீதமும், எப்எம்சிஜி குறியீடு 1.35 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, சன் பார்மா மற்றும் ஹெச்யூஎல் ஆகிய பங்குகள் உயர்ந்தன, மாறாக இன்போசிஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, கெயில் மற்றும் டாக்டர் ரெட்டி ஆகிய பங்குகள் சரிந்தன.
சந்தை மதிப்பு ரூ.100 லட்சம் கோடி
நேற்று பங்குச் சந்தைகள் உயர்ந்ததால் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு மீண்டும் ரூ.100 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் ரூ.68,483 கோடி சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது. சென்செக்ஸ் கடந்த அக்டோபர் 28-ம் தேதி இருந்த நிலையில் இப்போது வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகள் நேற்று உயர்ந்து வர்த்தகமாகின.