கிங்ஃபிஷர் வீழ்ச்சிக்கு குறைபாடுள்ள விமான இன்ஜினே காரணம்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு

கிங்ஃபிஷர் வீழ்ச்சிக்கு குறைபாடுள்ள விமான இன்ஜினே காரணம்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு
Updated on
1 min read

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வீழ்ச்சிக்கு குறைபாடுள்ள விமான இன்ஜினே காரணம் என்று இங்கிலாந்தில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய இன்ஜினை சப்ளை செய்த பிராட் அண்ட் விட்னி குழும நிறுவனமான ஐஏஇ மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக ட்விட்டர் பதிவில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இயங்கும் ஏர்பஸ் 320 நியோ விமானங்களின் இன்ஜினை இந்திய விமான இயக்குநர ஆணையம் (டிஜிசிஏ) விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் விஜய் மல்லையா இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களுக்குச் சொந்தமான 21 ஏர்பஸ் 320 நியோ ரக விமானங்களில் உள்ள பி அண்ட் டபிள்யூ இன்ஜினை ஆய்வு செய்யுமாறு டிஜிசிஏ உத்தரவிட்டது. இந்நிறுவனங்களின் விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறில் சிக்கிக் கொள்வதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறைபாடுள்ள இன்ஜினை சப்ளை செய்தது தொடர்பாக பிராட் அண்ட் விட்னி குழுமத்திடம் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக மற்றொரு ட்விட்டர் பதிவில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். பிராட் அண்ட் விட்னி குழுமத்தின் அங்கமான ஐஏஇ நிறுவன இன்ஜின் சப்ளை செய்துள்ளது. இந்த இன்ஜின் நிறுவனம் மீது 2013-ம் ஆண்டிலேயே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் 23 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஜிசிஏ கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஏ 320 ரக விமான இன்ஜினை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விமான இன்ஜின் குறித்த ஆய்வறிக்கை கிடைத்துவிடும் என்று டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு அதைத் திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்கிறார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in