

மூலப் பொருள் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டிகள் விலையை 20 சதவீதம் வரை உயர்த்துவதாக தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐசிபிஎம்ஏ) அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக சங்கத்தின் தலைவர் பால வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
அட்டைப் பெட்டி தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் இத்துறையில் ஈடுபட்டுள்ள வர்கள் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இத்தொழிலை காக்கவும், தொழில் துறையில் உள்ளவர்கள் மேலும் நஷ்டமடைவதைத் தடுக்கவும் இந்த விலை உயர்வு மிகவும் அவசியமாகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். அட்டைப் பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள் விலை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2011-ம் ஆண்டில் ஒரு டன் மூலப் பொருள் விலை ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனையானது. இப்போது விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, போக்குவரத்து கட்டணம், பசை போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமப் பகுதிகளில்தான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் துறையினர் எண்ணிக்கை அதிகமாகும்.
இப்பகுதிகளில் மின் தட்டுப்பாடு காரணமாக மாற்று மின்சாரத்துக்கு 50 சதவீதம் கூடுதல் செலவாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு அட்டைப் பெட்டிகளின் விலையை 20 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.