

உள்ளூர் ரசாயன தயாரிப்பு நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 6 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு எனும் வேதிப்பொருள் மீது பொருள் குவிப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், தாய்வான், தென் கொரியா, இந் தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி யாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மீது டன் ஒன்றுக்கு கூடுதலாக 118 டாலர் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரும்பு துரு பிடிப்பதை தடுக்கவும், காகிதக் கூழை வெண்மை படுத்தவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் நேஷனல் பெராக் ஸைடு லிமிடெட், ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரஜன் பெராக்ஸைடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இறக்குமதியாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு விலை குறைவாக இருப்பதால் தங்களது விற்பனை பாதிக்கப்படுவதாக இந்த நிறுவனங்கள் பொருள் குவிப்பு குறித்த வழக்குகளை விசாரிக்கும் டிஜிஏடி துறையிடம் புகார் செய்தன. இதை விசாரித்த இந்த அமைப்பு பொருள் குவிப்பு வரி விதிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
2011-12-ம் நிதியாண்டில் 17,464 டன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது 2014-ம் நிதியாண்டில் 67,300 டன்னாக உயர்ந்தது. மருந்துப் பொருள் தயாரிப்பிலும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக உள்ளூர் தொழில் நிறுவனங்கள் இறக்குமதியால் பாதிக்கப்படும் என தெரியவந்தால், உள்ளூர் நிறுவனங்களைக் காக்கும் பொருட்டு பொருள் குவிப்பு வரிவிதிக்க உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) விதிமுறைகளில் இடம் உள்ளது.
இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் நிறுவனங்கள் சந்தையில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு நசிந்து போவதைத் தடுப்பதற்காக இந்த விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொருள் குவிப்பு வரி விதிப்பானது நாட்டுக்கு நாடு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.