பேட்டரி பஸ்கள்: அசோக் லேலண்ட் திட்டம்

பேட்டரி பஸ்கள்: அசோக் லேலண்ட் திட்டம்
Updated on
1 min read

ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

லண்டனில் பிரபலமாகத் திகழும் ஆப்ட்ரா பஸ்களை அடுத்த ஆண்டு முற்பாதியில் அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே. தாசரி தெரிவித்தார். இங்கிலாந்தில் பிரபலமாக உள்ள ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்தில் பெருமளவிலான பங்குகளை அசோக் லேலண்ட் நிறுவனம் வைத்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இங்கிலாந்து அரசு ஆப்ட்ரா பஸ்களில் மேலும் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. பேட்டரி பஸ் தயாரிப்பில் சர்வதேச அளவில் ஆப்ட்ரா நிறுவனம் பிரபலமானதாகத் திகழ்கிறது. இத்தகைய பஸ்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற வுள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த பேட்டரி பஸ்கள் இடம்பெறும் என்று தாசரி தெரிவித்தார்.

பேட்டரி பஸ் தவிர்த்து ஹைபிரிட் மாடல் பஸ்களில் பேட்டரியோடு சிறிய ரக டீசல் என்ஜினும் இருக்கும். இது எலெக்ட்ரிக் பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருக்கும். டீசல் என்ஜினை அசோக் லேலண்ட் தயாரிக்கும், மோட்டார், பேட்டரியை யுகே நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேட்டரி பஸ்களுக்கான சந்தை மிகக் குறைவாக உள்ளதே என்று கேட்டதற்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நிறுவனம் சிஎன்ஜி பஸ்களை அறிமுகப் படுத்தியபோது இதே நிலைதான் இருந்தது. எதிர் காலத்தில் பேட்டரி மற்றும் ஹைபிரிட் பஸ்களுக்குத்தான் கிராக்கி இருக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in