

கடந்த ஜூன் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் (பிரென்ட்) 115 டாலருக்கு விற்பனையானது. ஆனால் அப்போதிலிருந்து சரிந்து வந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 91 டாலருக்கு விற்பனையாகிறது. இது கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும்.
அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் உற்பத்தி அதிகமாக இருப்பது, சீனா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார மந்த நிலை காரணமாக தேவை குறைந்திருப்பதுமே இந்த விலை சரிவுக்கு காரணமாகும். இதனால் கடந்த ஜூன் மாதம் ஒரு பீப்பாய் 6500 ரூபாய் என்ற விலையில் இருந்து இப்போது 5,800 ரூபாய் அளவுக்கு சரிந்திருக்கிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக சர்வதேச வளர்ச்சியை சர்வதேச செலாவணி நிதியம் குறைத்திருக்கிறது. இதில் ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் அடக்கம். பெரும்பாலான வல்லுநர்கள் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 90 டாலருக்கு கீழே செல்லும் வாய்ப்பு அதிகம் என்று கணித்திருக்கிறார்கள்.
எண்ணெய் விற்பனை பங்குகள் உயர்வு
கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக பிபிசில், ஹெச்.பி.சி.எல்., ஐ.ஓசி உள்ளிட்ட எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவன பங்குகள் 4 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன. ஹெச்.பி.சி.எல். பங்கு 5.55 சதவீதமும், பிபிசிஎல் பங்கு 3.71 சதவீதமும், ஐஓசி பங்கு 6.85 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. ஓ.என்.ஜி.சி பங்கு 2.37 சதவீதம் உயர்ந்து முடிந்தது.
அதே சமயத்தில் கெய்ர்ன் இந்தியா உள்ளிட்ட சில எண்ணெய் அகழ்வு நிறுவனங்களுக்கு இந்த விலை சரிவு பாதகமாகும். கடந்த ஒரு மாதத்தில் இந் நிறுவன பங்கு 14 சதவீதம் வரை சரிந்து முடிந்திருக்கிறது.