Published : 15 Feb 2014 09:30 AM
Last Updated : 15 Feb 2014 09:30 AM

பணவீக்கம் 5.05 சதவீதமாகக் குறைவு

நாட்டின் ஒட்டுமொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஜனவரியுடன் முடிந்த மாதத்தில் 5.05 சதவீதமாகக் குறைந்துள்ளது. முக்கியமான உணவுப் பொருள்கள் குறிப்பாக காய்கறிகளின் விலைகள் குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாகும். நடப்பு நிதி ஆண்டில் கடந்த 7 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக பணவீக்கம் அளவு குறைந்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை 8.80 சதவீத அளவக்குச் சரிந்திருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ஒட்டுமொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 6.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பரில் காய்கறிகளின் விலை 57.33 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.

இது கடந்த ஜனவரியில் 16.60 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் வெங்காயத்தின் விலை 6.59 சதவீதம் குறைந்தது. இது டிசம்பரில் 39.56 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது. இதேபோல பழங்களின் விலையும் கணிசமாக குறைந்திருந்தது. புரதம் நிறைந்த முட்டை, மீன், ஆகியவற்றின் விலையும் கணிசமாகக் குறைந்திருந்தது. அதேசமயம் பால் விலை சற்று அதிகரித்து 7.22 சதவீதமாக இருந்தது.

இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சில்லறை விலை பணவீக்கம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக 8.79 சதவீதமாகக் குறைந்திருந்தது. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 0.6 சதவீதம் மைனஸில் அதாவது இறங்குமுகத்தில் இருந்தது.

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட காலாண்டு நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் (0.25%) உயர்த்தியது. இதனால் பொருள்களின் விலை குறைந்ததாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடும்போது ஒட்டுமொத்த மற்றும் சில்லறை விலை குறையும் என்று கூறப்பட்டது. அதன்படி ஓரளவு விலை குறைந்து பணவீக்கமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு அட்டவணையின்படி எரிபொருள் துறைக்கான செலவு 6.84 சதவீதமாகவும், மின்சாரத்துக்கான செலவு 10.03 சதவீதமாகவும் இருந்தது.

உற்பத்தி பொருள்களான சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை சற்று உயர்ந்து 2.76 சதவீதமாக இருந்தது. பருப்பு விலைகள் 6.10 சதவீதம் சரிந்தது. உற்பத்தி பொருள்களின் பணவீக்கம் 2.76 சதவீதமாகக் குறைந்தது.

தொழில்துறை கருத்து

ஜனவரி மாத பணவீக்கம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், வளர்ச்சிபாதையில் பொருளாதாரம் செல்லும் என்று தொழில் துறையினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

பணவீக்கம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி, தன்னுடைய நிதிக்கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என்றும் வட்டி விகிதங்களை குறைத்து வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சி.ஐ.ஐ.யின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜீ தெரிவித்தார்.

உற்பத்தித் துறையில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று ஃபிக்கியின் தலைவர் சித்தார்த் பிர்லா தெரிவித்தார். மேலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டியது அவசியம் என்றும், நிறைய சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். பணவீக்கம் வேகமாகக் குறைந்திருப்பது தெளிவாக தெரிகிறது.

ரிசர்வ் வங்கி உடனடியாக தலையிட்டு வட்டி விகிதத்தை குறைத்து வளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று அசோசாம் தலைவர் ரானா கபூர் தெரிவித்தார். சில்லறை பணவீக்கம், மற்றும் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கடந்த முறை நிதிக்கொள்கை வெளியிட்டபோது 0.25 சதவீத வட்டி விகித உயர்வை ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த கடன் மற்றும் நிதிக்கொள்கை ஏப்ரல் 1-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x