

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கண்டிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிக முக்கியமானது. மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் மாறுபடும். அடுத்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும். அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. அனை வரும் ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார் கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஐஆர்எஸ் பணிக்குத் தேர்வாகி பயிற்சி பெற்றவர்களிடம் உரையாற்றும் போது இதை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஜிஎஸ்டி மசோதா ஏற்கெனவே மிக தாமதமாகி விட்டது. முன்ன தாகவே கொண்டு வந்திருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை கொண்டு வந்திருக்கிறோம். நான் தொடர்ந்து அனைத்து மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பேசி வருகிறேன். அதனால் இந்த மசோதா நிறைவேறிவிடும்.
இந்த சட்டம் குறித்து 1990ம் ஆண்டுகளில் இருந்து விவாதித்து வருகிறோம். இன்னும் இதுகுறித்து கருத்தொற்றுமை ஏற்படாமல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறிய பிறகு மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்ற மூன்று சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.
முன் தேதியிட்ட வரிச்சட்டம்
முன் தேதியிட்ட வரிச் சட்டம் நாட்டின் முதலீட்டு சூழலை பாதித்து வருகிறது. இந்த வரிச் சட்டத்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். நிலையான நேர்மையான வரியை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வரிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருந்தால்தான் வசூலிக்க முடியும். மாறாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லாமல் இருந்தால் வசூலிக்க முடியாது.
நீங்கள் 4-5 வருடங்கள் கழித்து வருமான வரிச் சட்டத்தில் முன் தேதியிட்ட வரி அமைப்பு இந்தியாவிற்கு உதவியதா? அல்லது இந்தியாவை பாதித்ததா? என்று கேட்டால் கண்டிப்பாக இந்தியாவை பாதித்தது என்றுதான் கூறுவேன். ஏனெனில் வரிகளை வசூலிக்க முடியவில்லை.
இந்த முன் தேதியிட்ட வரி சட்டத்தை முன் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில்தான் கொண்டுவரப்பட்டது.
முதலீட்டாளர்கள் நிலையான மற்றும் முன்னரே அறியக்கூடிய வகையில் வரி சட்டம் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். எதிர்பாராத வகையில் வரி விதிப்பதை அவர்கள் விரும்ப வில்லை. அதனால் நிலையான நேர்மையான வரிவிதிப்பு முறையைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வரிச் சட்டத்தின்படி வரி செலுத்தவேண்டும் என்றால் செலுத்தியாக வேண்டும். இதில் இரக்கம் காட்ட முடியாது. வயதான வராக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் இந்த காரணங்களைக் கொண்டு வரி செலுத்தாமல் இருக்க முடியாது. வரி விதிப்பு சட்டத்தில் இதையெல்லாம் பரிசீலனை செய்ய முடியாது.
ஐஆர்எஸ் பணியாளர்களின் வேலையே முறையாக வரியை வசூல் செய்வதுதான். வரிச்சட்டத்தின்படி பாதி வரி செலுத்தியவர்கள் என்பதெல்லாம் கிடையாது. வரி செலுத்தப்பட்டதா இல்லையா என்பது மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளில் முதலாவது வரி வசூல் செய்வதுதான். வரி வசூல் செய்யும்போதுதான் அரசாங்கம் முதலீடு செய்ய முடியும். இந்த சுழற்சியில் தடை ஏற்படும் போது பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படும்.
இந்தத் துறையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். அர சியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பல இடங்களில் இருந்து வந்தாலும் நேர்வழியில் செல்வது தான் இதற்கான தீர்வு. தவறான வழியில் செல்லும்போது எந்த எல்லையிலும் நீங்கள் சரிய நேரிடலாம் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.