

ரெட் பஸ் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பஸ் டிக்கெட்டுகள் செல்லாது என நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதனால் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்குச் செல்ல ரெட்பஸ் இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ரெட்பஸ் நிறுவனம், எங்களது இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாது என்கிற செய்தியில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ரெட்பஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான தனன் கிறிஸ்டதாஸ் கூறியதாவது : தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ரெட் பஸ் இணையதளம் மற்றும் செயலி மூலமும் மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர் சேவை சரியில்லாத, பேருந்துகளை மோசமாக பராமரிக்கும் நிறுவனங்களை அவ்வப்போது எங்களது இணையதளத்திலிருந்து நீக்குகிறோம். அப்படி நீக்கப்பட்ட நிறுவனங்கள் இது போன்ற தகவல்களை பரப்புகின்றன. எங்களிடம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் திட்டமிட்டபடி பயணம் செய்வதில் குழப்பம் இல்லை. எங்களது சேவையை பயன்படுத்தும் பேருந்து நிறுவனங்கள் வழக்கம் போல சேவையை வழங்குகின்றன என்று கூறினார்.